கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா விவிஐபிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகத் தனிவிமானம் கொடுத்து சேவை அளித்துள்ளது. இந்தச் சேவைக்காகச் சுமார் 325 கோடி ரூபாய் அளவிலான தொகையை மத்திய அரசு ஏர்இந்தியாவிற்குக் கொடுக்காமல் நிலுவை வைத்துள்ளதாகத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா
அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருக்கும் ஏர் இந்தியா சரியான வர்த்தகம் இல்லாத காரணத்தால் வருவாய் மற்றும் லாபத்தில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்நிறுவனத்தைத் தனியார்மயமாக்க தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அரசு நிதியுதவி
கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு ஏர் இந்தியா லாபம் அளிக்கவில்லை என்றாலும் சந்தையிலும் சேவையிலும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக அரசு அதிகளவிலான நிதி உதவி செய்து இயக்கி வருகிறது.
விவிஐபி
இந்நிலையில் ஏர் இந்தியா விவிஐபி-களுக்குச் சேவை அளிக்கப்பட்டதில் நிலுவையில் உள்ள தொகை விபரத்தை தெரிந்துகொள்ள ஓய்வுபெற்ற கப்பற்படை வீரர் லோகேஷ் பத்ரா, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டுள்ளார்.
பதில்
மார்ச் 8ஆம் தேதி தெரிவிக்கப்பட்ட பதிலில் விவிஐபி சார்ட்டெட் விமானங்களுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய நிலுவை தொகை மட்டும் 325.81 கோடி ரூபாய். இது ஜனவரி 31,2018 வரையிலான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியாண்டு
கடந்த நிதியாண்டு நிலுவை தொகையாக 84.01 கோடி ரூபாயும், நடப்பு நிதியாண்டில் 241.80 கோடி ரூபாய் அளவிலான தொகையும் மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது.
யார் இந்த விவிஐபி
ஏர் இந்தியா விவிஐபி சார்ட்டெட் விமானங்களை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அளிக்கப்படுகிறது.
இந்த விமானங்கள், உயர் ஆதிகாரிகள் மட்டும் செலுவதற்காகச் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யார் செலுத்த வேண்டும்..?
விவிஐபிகளுக்கான செலவின பணத்தைப் பாதுகாப்புத் துறை, வெளியுறவு விவகார துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம், மற்றும் நாடாளுமன்ற அமைச்சரவை செயலகம் ஆகியவை செலுத்த வேண்டும்.
நிலுவை தொகை அளவீடு
தற்போது நிலுவையில் உள்ள 325.81 கோடி ரூபாயில் வெளியுறவு விவகார துறை அமைச்சகம் 178.55 கோடி ரூபாயும், பிரதமர் அலுவலகம், மற்றும் நாடாளுமன்ற அமைச்சரவை செயலகம் இணைந்து 128.84 கோடி ரூபாயும், பாதுகாப்பு அமைச்சகம் 18.42 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய பின்பு
2018ஆம் ஆண்டுத் துவக்கத்தில் விவிஐபி சேவைகளுக்கான நிலுவை தொகை 1004.72 கோடி ரூபாயாக இருந்த நிலையில் அரசு 678.91 கோடி ரூபாயை செலுத்தியள்ளது.
இதன் மூலம் தற்போது உள்ள நிலுவை தொகை 325.81 கோடி ரூபாய்.


Click it and Unblock the Notifications