சிறு தொழில் செய்ய வழங்கப்படும் அரசு கடனுதவி திட்டங்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சிறுதொழில் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் வளர்த்துக் கொள்வதற்கும் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபார அமைப்புகளுடன் போட்டியிட வேண்டும் என்றால் சிறு தொழில் நிறுவனங்களுக்குத் தகுந்த ஆதரவும் நிதியுதவியும் தேவைப்படுகிறது.

அரசு வழங்கும் கடனுதவி

சிறு தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்குப் பல வழிகள் இருந்தாலும், குறைந்த வட்டிவிகிதத்தில் அரசு வழங்கும் கடனுதவியைப் பெறுவதுதான் தொழில் நிறுவன வளர்ச்சிக்கு உகந்ததாகும். ஒரு தொழில் நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாடுகள் தொய்வின்றித் தொடர வேண்டும் என்றால் இத்தகைய கடனுதவித் திட்டங்கள் மிகவும் அவசியமானதாகும்.

கடனுதவித் திட்டங்கள்

பல பொதுத் துறை வங்கிகள் அரசுத் துறைகளோடு இணைந்து பல்வேறு வகையான கடனுதவித் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, ஆந்திரா வங்கி, பரோடா வங்கிகளைப் போலவே பிற பொதுத் துறை வங்கிகளும் கடனுதவித் திட்டங்களை வழங்குகின்றன.

சிறுதொழில் மற்றும் வணிகத்திற்கான கடனுதவித் திட்டங்கள்

சிறுதொழில்கள், மற்றும் தொழில் முனைவோரின் நன்மைக்காக அவர்கள் செய்கின்ற தொழில், அதன் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகையான கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்த சிலவற்றைப் பார்ப்போம்.

நடப்பு முதலீட்டுக்கான கடனுதவித் திட்டங்கள்

ஒரு வணிகத்தின் அன்றாடச் செயல்பாடுகள் எவ்விதத் தடைகளுமின்றி நடப்பதற்குத் தேவையான முதலீட்டை இத்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் தேவையான கடனுதவியை நேரடியான நிதியாகவும், கடன் ஏற்பு உறுதிக் கடிதமாகவும் பெற்றுக் கொள்ளலாம். தொழில் செய்வதற்கான இயந்திரங்கள் மற்றும் வேறு ஏதேனும் சொத்துக்கள் வாங்குவதற்கும் இந்நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிறுவனம்சார்ந்த கடன்கள்

புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே இயங்கிவரும் வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்கும் இக்கடனுதவித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலமுறை கடனுதவித் திட்டங்கள்

வணிகம் மற்றும் தொழில் செய்வதற்குத் தேவையான கட்டடங்கள், இயந்திரங்கள் போன்ற அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கு இவ்வகையிலான கடனுதவித் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். பத்து ஆண்டுகள் வரையிலான காலத்துக்குள் திருப்பிச் செலுத்த கூடிய வகையில் மாறுபடும் வட்டி விகிதத்துடன் இத்தகைய கடனுதவித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

எஸ்பிஐ வங்கி வழங்கும் சில குறிப்பிட்ட நிதியுதவித் திட்டங்கள்

பொதுத்துறை வங்கிகள் பலவும் சிறு தொழிலுக்கான கடனுதவித் திட்டங்களை வழங்குகின்றன. கடன் திட்டங்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வதற்காகப் பாரத ஸ்டேட் வங்கியின் சிறு தொழில் கடனுதவித் திட்டங்கள் குறித்து மேலோட்டமாக இங்கே விவரிக்கப்படுகிறது.

தொழில் செய்வதற்காகக் கடனுதவியைப் பெற விரும்புகின்ற பெரும்பாலோனோர் நாடிச் செல்லும் வங்கியாகப் பாரத ஸ்டேட் வங்கி விளங்குகிறது. தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகம் செய்வோர் ஆகியோரின் தேவைகளை முழுமையாக அறிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு வகையான கடனுதவித் திட்டங்களை இவ்வங்கி வழங்குகிறது. வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கெனச் சிறப்பு நிதியுதவித் திட்டங்களை இவ்வங்கி செயல்படுத்துகிறது. இதற்கெனவே தனியான வங்கிக் கிளைகளைக் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இவ்வங்கி தொடங்கி நடத்திவருகிறது. வேளாண் தொழில் சார்ந்த வளர்ச்சிக்காக இவ்வங்கி வழங்கும் சில கடனுதவித்திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

• பயிர்க்கடன்
• தோட்டப் பயிர் வளர்ப்பிற்கான நிதியுதவித் திட்டம்
• பண்ணை இயந்திரமயமாக்கலுக்கான திட்டங்கள்
• வேளாண் நில விரிவாக்கத் திட்டம்
• சிறிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டம்
• காலமுறை வேளாண் கடன் திட்டங்கள்

 

வேளாண்துறை சாராத பிற தொழில்களுக்கான நிதியுதவித் திட்டங்கள்

• நடப்பு முதலீட்டுக்கான நிதியுதவித் திட்டம்
• நிறுவனம்சார்ந்த கடனுதவித் திட்டம்
• பின் செலுத்தலுக்கான உத்திரவாத திட்டம்
• திட்டம் சார்ந்த நிதியுதவித் திட்டங்கள்
• சீராய்வுக்குட்பட்ட நிதியுதவித் திட்டங்கள் (Structured Finance)

இந்திய அரசால் வழங்கப்படும் கடனுதவித் திட்டங்கள் மற்றும் வசதிகள்

சிறு தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகள் வழங்கும் சிறப்புக் கடனுதவித் திட்டங்கள் தவிர இந்திய அரசாங்கமும் பல்வேறு வகையான திட்டங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டுகிறது., மத்திய அரசாங்கம் தன்னுடைய பல்வேறு வகையான அமைப்புகளின் வழியாக, நிதி தேவைப்படுகின்ற தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது. அரசின் தொழில்சார் கடனுதவித் திட்டங்களைப் பின்வரும் நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன.

சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (SIDO)

சிறு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதையும், அதன் வளர்ச்சிக்கு உதவுவதையும் முதன்மையான நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்குகிறது.

சிறு தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கத்திற்கு இந்நிறுவனம் பரிந்துரை செய்கிறது. சிறு தொழில் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வுகளை நடத்தி அதன் வளர்ச்சிக்குரிய காரணிகளைக் கண்டறிவதும் இதன் பணியாகும்.

மத்திய அமைச்சகங்கள், திட்டக்குழு, மாநில அரசாங்கங்கள், நிதி நிறுவனங்கள், சிறு தொழில் வளர்ச்சியில் அக்கரையுள்ள பிற நிறுவனங்கள் ஆகியவற்றோடு நேரடியான தொடர்பை வைத்துள்ள சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், அதன் வழியாகச் சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவிசெய்கிறது. சிறு தொழில் நிறுவனங்களை நடுத்தரம் மற்றும் பெரிய அளவிலான நிறுவனமாக மாற்ற இந்நிறுவனம் முயற்சி செய்கிறது. அதற்காகத் தகுந்த பயிற்சிகள் மூலம் மனித வளத்தை மேம்படுத்தவும் இந்நிறுவனம் முன் வருகிறது.

இந்நிறுவனம் மட்டும் அல்லாமல், கீழ்க்கண்ட பிற நிறுவனங்களும் சிறு தொழில் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
• தேசிய சிறு தொழிற் கழக நிறுவனம் (NCIC)
• இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI)
• வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD)
• சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உலக அமைப்பு (WASME)

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government Loans for Small Scale Businesses

Government Loans for Small Scale Businesses
Story first published: Thursday, March 22, 2018, 18:27 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns