இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டு வரும் தொடர் மாற்றங்களை மூலம் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வருமானத்தையும், வர்த்தகத்தையும் காப்பாற்றிக்கொள்ளத் தனது வர்த்தக முறையில் புதுப்புது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் முக்கியமாக டெலிகாம் சந்தையில் விலை போர் நிலவும் காரணத்தால், முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் சேவைக் கட்டணத்தைப் பலமடங்கு குறைத்துள்ளது. இதில் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடு செய்ய ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து வருகிறது டெலிகாம் நிறுவனங்கள்.
1,00,000 ஊழியர்கள்
இந்திய டெலிகாம் நிறுவனங்களின் தொடர் நிர்வாக மாற்றங்களின் வாயிலாகச் சுமார் 1,00,000 ஊழியர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில் வோடபோன், ஐடியா நிறுவனம் புதிதாக ஒரு முடிவை எடுத்துள்ளது.
வோடபோன் - ஐடியா
இத்துறையில் நிலவும் போட்டியை சமாளிக்க ஸ்மார்டாகத் திட்டமிட்ட வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றாக இணைய முடிவு செய்துள்ளது. இதனால் டெலிகாம் சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்த முடியும் எனத் திட்டமிட்டுள்ள நிலையில் அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேமிப்பு
இரு நிறுவனங்களை இணைப்பதன் மூலம் ஒரே வேலைக்கு இரு அதிகாரிகள் இருக்கும் நிலையைத் தவிர்க்கவும், அதேபோல் ஊழியர்களின் திறனை மேம்படுத்தவும் அடுத்தச் சில மாதங்களில் இந்நிறுவனத்தின் அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய இரு நிறுவனங்களிலும் சேர்த்து சுமார் 21,000 ஊழியர்கள் உள்ளனர்.
கடன்
ஏற்கனவே ஐடியா மற்றும் வோடபோன் ஆகிய இரு நிறுவனங்களும் அதிகப்படியான வருவாய் சரிவால் நஷ்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், இந்நிறுவனங்களின் 1,20,000 கோடி ரூபாய் கடன் பெரிய சுமையாக விளங்குகிறது.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு நிறுவனத்திற்குக் கட்டண குறைப்பு என்பது மிகவும் அவசியமானது.
5,000 ஊழியர்கள்
இந்நிலையில் இரு நிறுவனங்களில் இருக்கும் நோடல் அணிகளுக்கு உயர்மட்ட நிர்வாகம் அடுத்த இரு மாதங்களில் சுமார் 5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கடன் நெருக்கடி
வாடிக்கையாளர் எண்ணிக்கையில் டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் வோடபோன், ஐடியா நிறுவனங்களின் தற்போது அதிகளவிலான கடன் நெருக்கடியில் இருப்பதால் புதிய வர்த்தகம் மற்றும் விரிவாக்கத்தைக் கூடச் செய்ய முடியாமல் தவித்து வருகிறது.
அடுத்தகட்டம்
இரு நிறுவனங்களும் இணையும்பட்சத்தில் இக்கூட்டணி கண்டிப்பாக 4ஜி சேவையை விரிவாக்கம் செய்ய வேண்டியது கட்டாயம், அதேபோல் எதிர்கால வர்த்தகச் சேவைக்காக 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அடிப்படை தளத்தை அமைக்க வேண்டும்.
இதைச் செய்தால் தான் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களோடு ஐடியா- வோடபோன் கூட்டணி போட்டி போட முடியும், இல்லையெனில் காணாமல் போகக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.
இணைப்பு
இந்த இணைப்பின் மூலம் இக்கூட்டணி நாட்டின் மொத்த டெலிகாம் வாடிக்கையாளர்கள் சந்தையில் 42 சதவீதத்தையும், வருவாயில் 37 சதவீதத்தையும் பெறும்.


Click it and Unblock the Notifications