வங்கி வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியாக இருக்கும். இதுவரை வங்கிகள் ஏடிஎம், செக்புக் என இலவசமாக அளித்து வந்த அனைத்துச் சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக இலவச பரிவர்த்தனைகளுக்கும் சேவை வரியான ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்பது மட்டும் இல்லாமல் முந்தைய 5 வருடங்களுக்குச் சேர்த்து வங்கிகள் வரி செலுத்த வேண்டும் என்றும் வரித் துறை கூறியிருப்பதே ஆகும்.
நோட்டிஸ்
வரித் துறையிடம் இருந்து எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ மற்றும் கோடாக் மகேந்திரா வங்கி என அனைத்து முக்கிய வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த இலவச சேவைகளுக்கான வரியைச் செலுத்த வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மினிமம் பேலன்ஸ்
வாடிக்கையாளர் ஒருவர் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ்-க்குக் குறையாமல் பணம் வைத்து இருந்தால் அவர்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் வங்கி கணக்குச் சேவையினை இலவசமாக வழங்கி வரும் நிலையில் அதற்கு வங்கிகள் வரி செலுத்த வேண்டும் என்றும் நோட்டிஸ்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வரும் அனைத்துச் சேவைகளுக்கும் இனி வரும் காலங்களிலும், தற்போது இருந்து 5 வருடம் முன்பு வரை வரி செலுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தை
வங்கி நிர்வாகங்கள் விரைவில் இது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தக் கூட்டத்தில் சுமுக உடன்பாடு எட்டினால் கட்டணங்களில் இருந்து பொது மக்கள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
5 வருடத்திற்கு வங்கிகள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?
வங்கிகளுக்கு முந்தை 5 வருடங்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த அனைத்து இலவச சேவைகளுக்கும் வரியினைச் செலுத்த வேண்டும் என்றும், வரும் காலத்தில் செய்யும் இலவச பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும் என்பதால் இந்த வரி தொகையானது 6,000 கோடி ரூபாய் வரை இருக்கும்.
வங்கிகள் என்ன செய்ய உள்ளன?
இது குறித்துத் தனியார் துறை வங்கி நிறுவன மூத்த அதிகாரியிடம் விசாரித்த போது, இது போன்ற நோட்டிஸ் வந்துள்ளது உண்மை என்றும், இது குறித்து அனைத்து வங்கிகளும் விவாதித்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிக்கிய மக்கள்
ஒரு வேலை அரசு வரி செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டால், வங்கிகள் சேமிப்பு/நடப்புக் கணக்குகளில் இருந்து பணம், எடுப்பது, டெபாசிட் செய்வது, ஏடிஎம் இலவச பரிவர்த்தனை என அனைத்து இலவச சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணத்தினை வசூலிக்க முடிவு செய்துள்ளன என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications