இந்தியாவில் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அளித்து வரும் அதே நேரம் தேவை அதிகமாக உள்ள நேரங்களில் (பீக் ஹவர்ஸ்) விமானக் கட்டணங்களைக் கூடுதலாக வசூலிக்க, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.
அதற்கான முன்வரைவுகளையும் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
விமான நிலையங்களில் நெரிசல்
பயணிகள் அதிக அளவில் விமானப் போக்குவரத்தை விரும்பத் தொடங்கியுள்ளதால், இந்திய விமான நிலையங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு நெரிசல் அதிகரித்துள்ளது. சில விமான நிலையங்கள் அதனுடைய போக்குவரத்துத் திறனைத் தாண்டி பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் நெரிசலும், அசாதாரணமான அலைக்கழிப்புகளும் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் கட்டண உயர்வு
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் பொதுமக்களின் தேவை அதிகரிக்கும் நேரங்களில், விமானப் பயணத்துக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியாவிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமானக் கட்டண வருவாய்
தற்போது சராசரியான அளவிலேயே விமானக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. கூட்டம் அதிகம் உள்ள நேரங்கள், தேவை அதிகரிக்கும் காலங்கள் எனக் கணக்கிட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இது தவிரத் தரை இறங்கும் விமானங்களுக்குக் குறிப்பிட்ட அளவு வரி விதிக்கப்படுகிறது.
கட்டண உயர்வு- முடிவு
வருவாயை மேலும் உயர்த்தும் நோக்கத்தில் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தேவை அதிகமாக உள்ள நேரங்களில் கட்டணத்தை உயர்த்துவதற்கான வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் கட்டண உயர்வு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்
உலகளாவிய கட்டண விதிப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டு, முன்வரைவுகளைத் தயாரித்ததுள்ளதாக ஏ.ஏ.ஐ சேர்மன் குருபிரசாத் மல்பத்ரா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications