இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் கடந்த ஒரு வருட காலமாக பங்குச்சந்தையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியாக ஒரு பங்கின் விலை 1,138.25 ரூபாய் வரையில் உயர்ந்தது. நேற்றைய வர்த்தக முடிவில் சுமார் 2.23 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 1,128.55 ரூபாயை அடைந்துள்ளது.
புதிய சேவைகள்
ரிலையன்ஸ் குழுமத்தின் 41வது வருடாந்திர கூட்டத்தில் இந்நிறுவனம் அடுத்து ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜியோ ஜிகா டிவி செட்அப் பாக்ஸ் சேவைகளை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வருடாந்திர கூட்டம்
இச்சேவைகளுக்குச் சந்தையில் அதிகளவிலான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இந்நிறுவனப் பங்குகள் மீது அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக வருடாந்திர கூட்டம் முடிந்த ஜூலை 5ஆம் தேதிக்கு பின் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 16 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்கள்
மேலும் இந்நிறுவனத்தின் டெலிகாம் சேவையான ஜியோ துவங்கி 22 மாதங்கள் ஆன நிலையில், ஜியோவில் தற்போது 215 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இந்நிறுவனத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் முதல் வருடத்தில் 125 கோடி ஜிபி இண்டர்நெட் பயன்படுத்தி வந்த நிலையில் 2வது வருடத்தில் இதன் அளவு சுமார் 240 கோடி ஜிபியாக உயர்ந்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
அனைத்திற்கும் மேலாக ரிலையன்ஸ் நிறுவனம் இன்னமும் ஜூன் காலாண்டு முடிவுகளை அறிவிக்கவில்லை. இந்த முடிவுகள் வெளியாகும் போது இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி வளர்ச்சி
கடந்த ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு சுமார் 46 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் இது 23 சதவீதமாகவும், சந்தை மதிப்பீடு 21 சதவீதம் வளர்ச்சி அடைந்து 7.09 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications