365 நாட்களில் ஒருகோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டைப் பல்வேறு தரவுகள் மூலம் திட்டவட்டமாக மறுத்தார்.

பாவகரமான செயல்
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் மோடி, பாய்ண்ட் பை பாய்ண்ட்டாக விளக்கங்களைக் கூறி பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது, எதிர்க்கட்சிகள் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசி இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றன. தகவலே இல்லாமல் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களைக் கூறும் அவர்கள், மீண்டும் சத்தியத்தை முறிக்க முயற்சிக்கிறார்கள். அரசியலுக்காக நாட்டில் உள்ள இளைஞர்களின் நம்பிக்கையைக் குலைப்பது பாவகரமான செயல் என்று தெரியாமல் இந்தப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள்..

சேமநல நிதி சந்தாதாரர் எண்ணிக்கை உயர்வு
2017 ஆம் ஆண்டுச் செப்டம்பர் முதல் 2018 ஆம் ஆண்டுச் செப்டர்பர் மாதம் வரை, ஈ.பி.எப்பில்(தொழிலாளர் சேமநல நிதி) 45 லட்சம் பேர் சந்தாதாரர்களா இணைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 28 வயதுக்கு உட்பட்டவர்கள். என்.பி.எஸ் சந்தாதாரர்களுடன் சேர்த்து மொத்தம் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. முழு ஆண்டாக இது நிறைவடையும் போது 70 லட்சம் வேலைவாய்ப்பாக அதிகரிக்கும். தொழிலாளர் காப்பீட்டுக்கழகத்தில் இணைந்தவர்கள், ஆதார் சந்தாதாரர்கள் நீங்கலாகத்தான் இந்தப் புள்ளி விவரம் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்முறை வேலைவாய்ப்பு
நாட்டில் தொழில்முறை படிப்பு முடித்த ஏராளமானோர் புதிதாகப் பதிவு செய்துள்ளனர். உதாரணமாக டாக்டர்கள், என்ஜினியர்கள், ஆர்கிடெக்ட்ஸ், கம்பெனி செக்ரட்டரீஸ் ஆகியோர் பயிற்சியைத் தொடங்கியுள்ளதாகத் தனியார் நிறுவனம் நடத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தணிக்கைத் துறை வாய்ப்பு
இந்த அமைப்பில் இணைந்துள்ள 17 ஆயிரம் கணக்குத் தணிக்கையாளர்கள் 5 ஆயிரம் புதிய நிறுவனங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்.இதில் ஒரு தணிக்கைத்துறை நிறுவனம் தலா 20 பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தால் 1 லட்சம் தணிக்கையாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும்

மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு
ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் டாக்டர்கள், பல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆயுஸ் வைத்தியர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறுவதாக வைத்துக்கொள்வோம்.இதில் 60 சதவீதத்தினர் சொந்தமாகப் பயிற்சியைத் தொடங்கி 5 பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்திருந்தால், 2017 ஆம் ஆண்டு மட்டும் 2,40,000 பேருக்கு வேலை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 80 ஆயிரம் இளநிலைப்பட்டதாரிகளும், முதுநிலை வழக்குரைஞர்களும் கல்லூரிகளிலிருந்து வெளியேறுகிறார்கள். அவர்களில் 60 விழுக்காட்டினர் பயிற்சியைத் தொடங்கி 2 அல்லது 3 பேருக்கு வேலை வழங்கியிருந்தால் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றிருக்க முடியும் எதிர்பார்க்கலாம்.

6 லட்சம் பேருக்கு வேலை
தொழில்முறை படிப்பு முடித்தவர்களால் ( டாக்டர்கள், வழக்குரைஞர்கள், தணிக்கையாளர்கள்) 2017 ஆண்டில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

முறைசாரா துறைகளில் வேலை
முறைசாரா தொழிலில் குறிப்பாகப் போக்குவரத்துத் துறையில் மட்டும் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 7.60 லட்சம் வணிக ஊர்திகள் விற்கப்பட்டுள்ளன.இதில் 25 விழுக்காடு ரீபிலேஸ்மெண்ட் செய்யப்பட்டிருந்தாலும், 5.7 லட்சம் வணிக ஊர்திகள் சேவையைத் தொடங்கியிருக்க வேண்டும். 2 ஷிப்ட் வேலையாக இருந்தால் 2 ஊர்திக்கு 3 பேர் வேலைவாய்ப்பை பெற்றிருக்க முடியும். மொத்தத்தில் இந்தத் துறையில் 3,40,000 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

போக்குவரத்துத் துறையில் வாய்ப்பு
25,40,000 பயணிகள் ஊர்திகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதில் 25 சதவீதம் ரீப்பிளேஸ்மெண்டில் செய்யப்பட்டிருந்தால் கூட 20 லட்சம் புதிய ஊர்திகள் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். இதில் டிரைவர், கண்டெக்டர் என லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

ஆட்டோ விற்பனையும்- வேலை வாய்ப்பும்
கடந்த ஆண்டில் மட்டும் 2,55,000 ஆட்டோக்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 102 விழுக்காடு ரீப்பிளேஸ்மென்ட்டில் வாங்கியிருந்தால், 2,30000 புதிய ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருக்கும். இதன் மூலம் 3,40000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

உண்மையைப் புதைக்காதீர்கள்
இந்தப் புள்ளி விவரங்களை நீங்கள் கருத்தில் கொண்டால் ஒரு வருடத்தில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிவீர்கள்.இது தனியார் நிறுவனங்களின் தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் உண்மையைக் குழிதோண்டி புதைக்க முயற்சிக்காதீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.