மக்கள் பிரச்னைகளை பேசுவதற்காக சட்ட சபையினை கூட்டு கிறார்களோ இல்லையோ, அவரகள் சம்பளம் தொடர்பான பிரச்னைகளை பேசி ஒரு முடிவெடுக்க, அத்தனை ஒற்றுமையாகக் கூடி உய்ர்த்திக்கொண்டு விடுகிறார்கள். இதற்கு மோட்யின் மாநிலமான குஜராத் மட்டும் விதி விலக்கா என்ன?
பக்காவாக பாஸான சட்டம்
குஜராத் சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்களுக்கான சம்பள மற்றும் சலுகைகள் சட்டம் 2018 பிரதிப்சின் ஜடேஜாவால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை ஆலுங்கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் நிதின் பட்டேல் வரவேற்றார். எதிர்கட்சியின் சட்ட சபை உறுப்பினராக நிரஞ்சன் பட்டேல் இந்த சட்டத்தை ஆதரித்து வழி மொழிந்தார்.
யாருக்குச் சமமான சம்பளம்
மகாராஷ்டிரத்தில் முதன்மை செயலாளருக்கு வழங்கப்படும் சம்பள அளவைகளைத் தான் சட்ட சபை உறுப்பினர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால் குஜராத்தில் துணை செயலாளருக்கு வழங்கப்படும் சம்பள அளவிகளைத் தான் அடிப்படியாகக் கொண்டு சம்பளங்களைக் கணக்கிட்டிருக்கிறோம் என்றார் ஜடேஜா.
மினிமம் ரூ.45,000 ஹைக்
இன்று குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. புதிய சம்பளச் சட்டப்படி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எதிர் கட்சித் தலைவர், சபா நாயகர் மற்றும் துணை சபாநாயகர் போன்றவர்களின் சம்பளம் குறைந்தபட்சம் 45,000 ரூபாயாவது அதிகரிக்கும்.
எம்.எல்.ஏ சம்பளம்
ஒரு குஜராத் சட்ட மன்ற உறுப்பினர் குறைந்த பட்சம் 1.16 லட்சம் ரூபாய் மாத சம்பளமாகப் பெறுவார். இதற்கு முன் ஒரு குஜராத் சட்ட மன்ற உறுப்பினருக்கு ரூபாய் 70,727 வழங்கப்பட்டு வந்தது. இது முந்தைய சம்பளத்தை விட சுமாராக 64% உயர்வு.
மற்றவர்கள் சம்பளம்
சபா நாயகர், துணை சபாநாயகர், எதிர் கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கு மாதம் 1,32,000 ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு முன் இவர்களுக்கு மாதம் 86,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இது முந்தைய சம்பளத்தை விட சுமார் 56% உயர்வு.
எப்போது இருந்து
கடந்த பிப்ரவரி 2017-ல் இருந்து இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்பட்டு பாக்கித் தொகைகள் கூடிய விரவில் வழங்கப்படும். பாக்கித் தொகை மட்டும் சுமாராக ஆறு கோடி ரூபாய் வரை வரலாம். இந்த புதிய சம்பள உயர்வினால் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய், அரசுக்கு கூடுதல் செலவாகும்.
மற்ற மாநிலங்களில்
உத்தராகண்டில் 2.91 லட்சம் ரூபாய், தெலுங்கானாவில் 2.50 லட்சம் ரூபாய், ஜார்கண்டில் 2.25 லட்சம் ரூபாய் & மகாராஷ்டிரத்தில் 2.13 லட்சம் ரூபாய் என்று வழங்கி வருகிறார்கள். அவ்வளவு ஏன் தமிழகம், ஒடிஸா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கூட மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சட்ட சபை உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கி வருகிறார்கள்.
இப்போது ஏன்...?
குஜராத் மாநிலத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு கடைசியாக 2005-ம் ஆண்டு தான் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு பின் இப்போது தான் வழங்குகிறோம். இதுவே மிகவும் காலம் தாழ்ந்த முடிவு தான், இப்படி எங்களைச் சுற்றி ஏழ்மையான மாநிலங்களே தங்கள் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளும் போது, நாங்கள் ஏன் அதிகரித்துக் கொள்ளக் கூடாது..? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார் ஜடேஜா.


Click it and Unblock the Notifications