இன்று மருத்துவத் துறை வெறும் மருந்து, மாத்திரைகளைத் தாண்டி பல்வேறு மருத்துவ சாதனங்களையும் (medical devices) பயன்படுத்தி வருகிறது. இந்த மருத்துவ சாதனங்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.
மருத்துவ சாதனங்கள் சரியாக செயல்படாத போது, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகளுக்கு, மருத்துவ சாதனத்தை தயார் செய்த நிறுவனத்தையோ அல்லது மருத்துவம் செய்த மருத்துவமனைகளையோ ஒரு பாதிக்கப்பட்டவர், குற்றம் சாட்ட முடியாமல் இருந்தது. இப்போது அதற்கு செக் வைக்கும் ரீதியில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது அரசு.
இதுவரை
மருத்துவ சாதனங்களால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கோ அல்லது நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கோ நஷ்ட ஈடு கொடுப்பது அல்லது மீண்டும் மருத்துவ சிகிச்சை செய்வது குறித்து எந்த ஒரு சட்டமும் சொல்ல வில்லை. இந்த ஒரு விஷயத்தைக் காட்டியே பல நிறுவனங்கள் நுகர்வோர் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தனர்.
உதாரணம்
சமீபத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் ஏஜெண்டுகள் அதிகம் இருப்பதைக் கண்டு பிடித்தார்கள். இந்த ஒரு விஷயத்துக்காக இந்தியாவில் பல வழக்குகளும் தொடுக்கப்பட்டது. ஜான்சன் அண்ட் ஜான்சனிடம் இருந்து எந்த ஒரு நஷ்ட ஈடும், எவராலும் வாங்க முடியவில்லை.
இனி
இந்த புதிய சட்டம் வரும் பட்சத்தில், ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்கள் மீது எளிதாக வழக்குத் தொடுத்து நஷ்ட ஈடும் வாங்கிக் கொள்ளலாம் என்று அரசுத் தரப்புகள் தெரிவித்திருக்கின்றன. இந்த புதிய சட்டம் Medical Device Rules, 2017-ன் கீழ் வெகு விரைவில்அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசு தரப்பு தெரிவித்திருக்கின்றன.
என்ன எல்லாம் க்ளெய்ம் செய்யலாம்
ஒருவேளை ஒரு மருத்துவ சாதனம் மூலம், பிரச்னைகள் உறுதிப்படுத்தப் பட்டால், மறு சிகிச்சைகள், மருத்துவ பரிசோதனைகளோடு நஷ்ட ஈடும் கோர முடியும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதை ட்ரக் கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியாவும் (Drug Controller General of India) உறுதிப்படுத்தி இருக்கிறது.
மிக முக்கியமான விஷயம் என்ன என்றால் இந்திய அரசால் அனுமதி வழங்கப்பட்ட மருத்துவ சாதனங்களுக்கு மட்டும் தான் இந்த சட்டத்தின் கீழ் இழப்பு கோரலாம். மெடிக்கல் ட்ரயல்-களுக்கு எல்லாம் இந்த சட்டத்தின் கீழ் நஷ்டம் கோர இயலாது என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
எதுக்கு எவ்வளவு
ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு இவ்வளவு தொகை வரை நஷ்ட ஈடோ அல்லது மருத்துவ செலவுகளோ பெறலாம் என்று இதுவரை நிர்ணயிக்கவில்லை. நிணயிக்கப் போவதும் இல்லை. ஒருவருக்கு மருத்துவ சாதனங்கள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகளைப் பொருத்து அவருக்கான இழப்புத் தொகை மற்றும் மருத்துவச் செலவுகள் வழங்கப்படும் என்று டிசிஏஜி தலைவர் ஈஸ்வர ரெட்டி தெரிவித்தார்.
இறுதி கமிட்டி
இருப்பினும் அரசுக்கு இழப்பீடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளின் மீது ஒரு தெளிவான பார்வை வேண்டும் எனப்தால், ஒரு நோய்க்கு எவ்வளவு வரை தோராயமாக செலவாகும் என்று கணித்துக் கொடுக்க மருத்துவர் ஆர்.கே ஆர்யா தலைமையில் ஒரு மத்தியக் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த கமிட்டி தன் அறிக்கையை சமர்பித்த உடன் இந்த சட்டத்துக்கான அறிவிப்பை முறையாக மத்திய சுகாதார அமைச்சகத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications