அப்போலோ ஹாஸ்பிடல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுனிதா ரெட்டியின் அறையில் கடவுள் துர்கா தேவியின் புகைப்படம் எப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாள் காலையிலும் துா்கா தேவியை வணங்கிய பிறகுதான் சுனிதா ரெட்டியின் அன்றாடப் பணிகள் தொடங்குகின்றன. நான்கு சகோதரிகளால் வழிநடத்தப்பட்டு மிக வெற்றிகரமாகப் பரந்து விரிந்து இயங்கிக் கொண்டிருக்கும் அப்போலோ ஹாஸ்பிடல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அறையில், சக்தியின் வடிவமான துர்கா தேவியின் படம் இருப்பது மிகவும் பொருத்தமாகவே உள்ளது.
சுனிதா ரெட்டி
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவ நிறுவனமான அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பினை சுனிதா ரெட்டி மற்றும் அவருடைய மூன்று சகோதரிகளும் தங்களுடைய தந்தையிடமிருந்து ஏற்றுக் கொண்டனர். பல முக்கிய நகரங்களில் மருத்துவமனைகளைக் கொண்டு, இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவமனை நிறுவனமாக அப்போலோ ஹாஸ்பிடல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் திகழ்கிறது. இச்சகோதரிகளின் தலைமையிலான நிர்வாகம், இரண்டாம் நிலைப் பெரு நகரங்களில் மருத்துவமனையைத் தொடங்குவதற்காகப் மிகப் பெரிய கட்டடங்களைக் கட்டத் தொடங்கியது. மெட்ரோ நகரங்களைப் போலவே இரண்டாம் நிலை நகரங்களிலும் பொருளாதார வளர்ச்சி பலமடையும். அப்பொழுது அந்நகரங்களில் வசிப்பவர்களும் அப்போலோ போன்ற பெரும் மருத்துவ மனைகளில் மருத்துவம் பார்க்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக மாறுவர் என ரெட்டி சகோதரிகள் கணித்தனர். ஆனால், அப்போலோவின் விரிவாக்க முயற்சிகள் வெற்றியடைந்து இலாபம் ஈட்டுமா என முதலீட்டாளர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. அதனால், அப்போலோ நிறுவனத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இரண்டாயிரம் கோடி முதலீடு
ஆனால், ரெட்டி சகோதரிகளின் நம்பிக்கையும் துணிச்சலான முயற்சியும் வீண் போகவில்லை. ஏறக்குறைய இரண்டாயிரம் கோடி முதலீடு (280 மில்லியன் டாலர்), நான்கு ஆண்டுகளாக நடந்த கட்டுமானப் பணிகள். இப்பொழுது அனைத்து மருத்துவ மனைகளும் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு மருத்துவமைனையும் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டிலிருந்து அப்போலோவின் வருமானம் சீராக உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அப்போலோ மருத்துவ நிறுவனப் பங்குகள் 30 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. இந்த உயர்வு மேலும் அதிகரிக்கும் எனப் பங்கு வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
பெரிய மருத்துவமனை
தேவைக்கும் அளிப்புக்கும் இடையே ஒரு இடைவெளி நிலவுவதை நாங்கள் கணித்தோம். அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்ய நாங்கள் முயன்றோம். மக்களுடைய செலுத்தும் திறன் அதிகரித்துள்ளது. எனவே எங்களைப் போன்ற பெரிய மருத்துவ மனைகளை அவர்கள் நாடுகின்றனர்." என்கின்றார் 59 வயதான சுனிதா ரெட்டி. மருத்துவ மனை நிர்வாகத்தின் இணை மேலாண்மை இயக்குநர்களுள் (co-managing director) இவரும் ஒருவர்.
பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு 2.5 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது இந்நிறுவனப் பங்கு விலை 1,215 ரூபாயாகும்.
தடைகளைத் தாண்டி முன்னேற்றம்
இந்தியாவில், உடல் நலம் (Health-care) சார்ந்த வணிகத்தின் சந்தை மிகப் பெரும் அளவில் விரிவடைந்து வருகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் மருத்துவம் சார்ந்த தொழில் இரண்டு மடங்குக்கும் மேல் வளர்ச்சியடைய வாயப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இத் தொழிலின் சந்தை மதிப்பு 133 பில்லியன் டாலரை எட்டும் என அரசு நிறுவனமான இந்தியா பிரண்ட் ஈக்விட்டி பவுண்டேசன் தெரிவித்துள்ளது. பெரும்பாலான நோயாளிகள் தங்களுடைய மருத்துவச் செலவுகளை தங்களுடைய சொந்தப் பணத்தின் மூலமாகவே ஈடு செய்கின்றனர். தற்போது உடல்நலம் சார்ந்த காப்பீட்டுத் தொழில் வெகுவாக வளர்ந்துவிட்டது. இனி வரும் காலங்களில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். பிரதம மந்திரி மோடி அவர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இந்திய மக்கள் தொகையில் பாதிப் பேரை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
நிறைய சவால்களும்
அப்போலோ மருத்துவ நிர்வாகத்திற்குப் புதிய வாய்ப்புகள் இருப்பதைப் போலவே நிறைய சவால்களும் உள்ளன. நிறுவனத்திற்கு முதலீடுகள் குவிந்து வரும் அதே வேளையில், நிறுவனத்திற்கான செலவுகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன. மேலும் மருத்துவமனை நிறுவனத்தின் கடன்கள் கடந்த நான்கு ஆண்டுகளோடு ஒப்பிடும் போது இரு மடங்காக உயர்ந்துள்ளன.
அறுவைச் சிகிச்சை
அப்போலோ மற்றொரு சவாலையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதனை மிகச் சாதுரியமாக இந்நிறுவனம் சமாளிக்க வேண்டியுள்ளது. சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர்களை மும்பை மற்றும் பிற இடங்களில் பணியமர்த்துவதுதான் அந்தச் சவால் ஆகும். இது எளிதான விசயம் அல்ல. இரண்டாம் நிலைப் பெரு நகரங்களில் வசிப்பவர்கள் இந்த அளவுக்கு உயரிய மருத்துவத்திற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. மேலும் மருத்துவத் துறையில் போட்டிகள் அதிகரித்துவிட்டன. பெரும் மருத்துவ நிறுவனங்கள் சந்தை வாய்ப்புகளைத் தட்டிச் செல்ல போட்டி போட்டு நிற்கின்றன.
மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம்
மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் இவ்வளவு விரைவாகச் செயல்படுத்தப்படும் என அப்போலோ நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இந்தத் திட்டத்திற்கென தங்களுடைய மருத்துவமனைகளில் சில அறைகளையும் படுக்கைகளையும் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது அப்போலோ நிர்வாகம். இது மருத்துவமனை நிர்வாகத்திற்கு பலன் அளிக்காது. சென்னையின் புறநகர்ப பகுதிகளில் குறைவான செலவிலான மருத்துவ நலத் திட்டங்களைச் செயல்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மருத்துவர்களுக்கு அவர்களுடைய மருத்துவச் சேவைகளுக்கு ஏற்ப கட்டணங்களைச் செலுத்தாமல் மாத ஊதிய அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துவது தொடர்பாகவும் புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.
70 சதவிகிதம் அளவிற்கு நோயாளிகளின் வருகை
தங்கள் மருத்துவ மனைகளில் உள்ள பயிற்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ சிகிச்சைக்கான படிநிலைகளை (protocols) உருவாக்கி அந்த நடைமுறைகளை பெரிய நகரம் முதல் சிறிய நகரங்கள் வரை உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் ஒரேமாதிரியாகப் பின்பற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இயங்கி வரும் மருத்துவ மனைகளோடு ஒப்பிடும் பொழுது புதியதாகத் தொடங்கப்பட்ட மருத்துமனைகளில் 70 சதவிகிதம் அளவிற்கு நோயாளிகளின் வருகை உள்ளது. இப் புதிய மருத்துவ மனைகளில் இலாப விகிதம் தற்போது 6 சதவிகிதமாக உள்ளது. இது 20 சதவிகிதமாக உயரும் என சுனிதா ரெட்டி கணித்துள்ளார்.
அப்போலோ
"அப்போலோ நிர்வாகம் கணித்ததைப் போலவே அவர்களுடைய வளர்ச்சி இருக்கும்" என பங்கு வர்த்தக நிபுனர்கள் கருதுகின்றனர். அப்போலோ நிர்வாகம் தங்களுடைய மருத்துவமனைகளை மிகச் சரியான நகரங்களில் தொடங்குவதாக இவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான நிபுணர்கள் இவர்களுடைய நிறுவனத்தின் பங்குகளை வாங்க பரிந்துரை செய்கின்றனர்.
டாக்டர் பிரதாப் ரெட்டி
அப்போலோ மருத்துவ மனையைத் தோற்றுவித்தவர் டாக்டர் பிரதாப் ரெட்டி ஆவார். 1983 ஆம் ஆண்டு இம் மருத்துவமனை நிர்வாகத்தை இவர் ஏற்படுத்தினார். முறையான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்த ஒரு நோயாளி இறந்துவிட்டார். இதன் காரணமாகவே அனைத்து வசதிகளும் கொண்ட நவீன மருத்துவமனைகளை உருவாக்க விரும்பினார் பிரதாப் ரெட்டி. அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் ஆகும். ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் டாலர் ஆகும். சர்வதேச அளவில் புகழ்ப்பெற்ற மருத்துவர்களையும், அனைத்து வகையான நவீன வசதிகளும் கொண்ட அறுவைச் சிகிச்சை அரங்குகளையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. ஒரு வரவேற்பறை மற்றும் இரண்டு கழிவறைகளையும் கொண்ட அறைகளை வேண்டுமானாலும் நோயாளிகள் தேர்வு செய்து கொள்ளலாம். அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் 34 சதவிகிதப் பங்குகள் ரெட்டி குடும்பத்தினரிடம்தான் உள்ளது.
மகள்களுள்
இந்நிறுவனத்தின் தலைவராக 86 வயதான டாக்டர் பிரதாப் ரெட்டி உள்ளார். இவருடைய நான்கு மகள்களுள் பிரீதா ரெட்டி மற்றும் சோபனா காமினேனி ஆகிய இருவரும் இணை துணைத் தலைவர்களாக (co-vice chairs) உள்ளனர். மற்ற இரண்டு சகோதரிகளான சுனிதா ரெட்டி மற்றும் சங்கீதா ரெட்டி ஆகிய இருவரும் மேலாண்மை இயக்குநர்களாக உள்ளனர்.
தந்தைக்குப் பிறகு, மருத்துவமனை நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புக்கு மூத்த மகள் பிரீத்தா ரெட்டி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் நான்கு சகோதரிகளும் தங்களுக்குள் வாக்களித்து யாரை வேண்டுமானாலும் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வரலாம்.
அமெரிக்கா
அப்போலோ மருத்துவனை நிர்வாகக் குழுவில் மொத்தம் 10 பேர் உள்ளனர். அதில் இந்த ரெட்டி சகோதரிகள் நான்கு பேர் உள்ளனர். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள முக்கிய நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ள பெண்களின் சதவிகிதத்தைக் காட்டிலும் இது அதிகம். "நாங்கள் நான்கு பேரும் எங்களுடைய பணிகளைத் தனித்தனியாகப் பிரித்துக் கொண்டு செயல்படுகிறோம். ஒவ்வொருவரும் அவரவரின் திறமைகளைக் காட்ட இது வழி வகுக்கிறது" எனச் சொல்கிறார் சுனிதா ரெட்டி.
இணைந்து செயல்பட முடிகிறது
"நாங்கள் நான்கு பேரும் சகோதரிகளாக இருப்பதால் இணைந்து செயல்பட முடிகிறது. ஒரு வேளை எங்களுடைய தந்தைக்கு நான்கு மகன்கள் இருந்திருந்தால், அவர்கள் நான்கு நிறுவனங்களைத் தொடங்கி இருப்பார்கள்" எனக் கூறிச் சிரிக்கிறார் அப்போலோ என்னும் மருத்துவ நிறுவனச் சாம்ராஜ்ஜியத்தின் மேலாண்மை இயக்குநர் சுனிதாரெட்டி.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications