டெல்லி: ஊழியர்களிடம் வசூலித்த டிடிஎஸ் தொகையை கட்ட தவறினால் வருமான வரி விதிகளின்படி 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கம். வரி ஏய்ப்பு ரூ. 25,000க்கு கீழ் இருந்தால் 2 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ. 25,000க்கு மேல் இருந்தால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை உண்டு. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.
வரி ஏய்ப்பு மிகச்சிறிய அளவாக இருந்தாலும் வருமான வரித்துறை விடுவதில்லை. இப்படி பல ஆயிரம் பேருக்கு வருமான வரி நோட்டீஸ் பறந்துள்ளது. 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பதால், பலர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
வரி வருவாயை அதிகரிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயித்துள்ளது மத்திய நேரடி வரிகள் ஆணையம். நேரடி வரி வருவாய் குறைந்ததை தொடர்ந்து, இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு வரிகள் ஆணையம் அதிகரிகளுக்கு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
இதை தொடர்ந்து, வரி ஏய்ப்புகளை கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆனால், சிறு தவறு இருந்தாலும் விட்டு வைப்பதில்லை. உடனேயே நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
7 ஆண்டு சிறை தண்டனை
ஊழியர்களிடம் வசூலித்த டிடிஎஸ் தொகையை கட்டாததற்கு நோட்டீஸ் பறந்துள்ளது. வருமான வரி சட்டம் பிரிவு 276பி-ன்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நோட்டீசில் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வருமான வரி விதிகளின்படி டிடிஎஸ் பணத்தை கட்ட தவறினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
கலக்கத்தில் வரி ஏய்ப்பாளர்கள்
வரி ஏய்ப்பு ரூ. 25,000க்கு கீழ் இருந்தால் 2 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ. 25,000க்கு மேல் இருந்தால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை உண்டு. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கலாம். கடந்த சில மாதங்களாக, இப்படி தண்டனை விதிகளை குறிப்பிட்டு பல ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி கலக்கம் அடைய வைத்துள்ளது. நிறுவனங்கள் மட்டுமல்ல, மாதச்சம்பளம் வாங்குவோரும் இதில் தப்பவில்லை.
தாமதத்திற்குக் காரணம்
தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்த அல்லது தாக்கல் செய்ய மறந்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சரியான ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஏற்கத்தக்க காரணம் என்று எந்த வரையறையும் இல்லை எனினும், உடல் நலக்கோளாறு, நிதி தட்டுப்பாடு ஆகய காரணங்கள் கூட உரிய ஆதாரத்தோடு சமர்ப்பிக்கப்பட்டால் சூழ்நிலை கருதி ஏற்கப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மாஜிதிரேட் முன்பு ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றனர்.
இந்திய வருமான வரித்துறை
வருமான வரி ஏய்ப்பாளர்கள் பற்றி ரகசிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று, இந்திய வருமான வரித் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கவும், வரி ஏய்ப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அளிக்கும் நபர்களை ஊக்குவிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சிறை தண்டனையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications