வாரணாசி: நாங்கள் 5,80,000 கோடி ரூபாயை மக்களுக்கு அளித்துள்ளோம். பல்வேறு திட்டங்கள் மூலமாக மக்களின் வங்கிக்கணக்கில் இந்தப் பணம் சென்று சேர்ந்துள்ளது. ஆனால், பழைய ஆட்சி அமைந்திருந்தால் 4,50,000 கோடி ரூபாய் மாயமாய் மறைந்து போயிருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி போல் இல்லாமல் பாரதீய ஜனதா கட்சி தான் கொடுத்த வாக்குறுதிப்படி மக்களுக்குச் சென்று சேர வேண்டிய தொகையை முழுவதுமாக மக்களிடமே அளித்துள்ளது எனப் பெருமையுடன் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் அறிவிப்பின் போது, வெளிநாட்டிலுள்ள வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று அறிவித்தார். ஆனால் இன்று வரை அப்பிடி எந்த கருப்பு பணத்தையும் மீட்கவில்லை. வங்கி கணக்குகளில் போடவும் இல்லை. மோடியின் இந்த திட்டங்களை எல்லாம் கேலி செய்து பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பேசி வந்தனர்.
இந்த நிலையில் வாரணாசியில் நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களைக் கவுரவிக்கும் விழாவான ப்ராவாசி பாரதீய திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் ஒருவர் ஊழல் குறித்துப் பேசியுள்ளார். டெல்லியிலிருந்து அனுப்பப்படும் நிதியில் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே நாட்டின் கிராமங்களைச் சென்றடைகிறது என்றும், மீதி 85 பைசா மறைந்துவிடும் என்றும் கூறியிருப்பார். நாட்டைப் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த அந்தக் கட்சியே இதை ஒப்புக்கொண்டுள்ளது. அவர்கள் ஆட்சியில் இது மாறவேயில்லை. இந்த குறைபாட்டை அவர்கள் ஒப்புக் கொண்டனர். 1 ரூபாயில் 85 பைசா கொள்ளை தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது.
5 ஆண்டு காலம் ஆட்சி செய்த நாங்கள் 5,80,000 கோடி ரூபாயை மக்களுக்கு அளித்துள்ளோம். பல்வேறு திட்டங்கள் மூலமாக மக்களின் வங்கிக்கணக்கில் இந்தப் பணம் சென்று சேர்ந்துள்ளது. ஆனால், பழைய ஆட்சி அமைந்திருந்தால் 4,50,000 கோடி ரூபாய் மாயமாய் மறைந்து போயிருக்கும் என்று கூறினார்.
முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் சொன்ன கருத்தான, அரசு கொடுக்கும் 1 ரூபாயில் வெறும் 15 பைசாதான் மக்களை சென்றடைகிறது. இந்த கசிவை அரசால் தடுக்க முடியவில்லை' என்பதை மேற்கொள் காட்டியுள்ளார் மோடி.
மோடி போட்ட பணம் எங்கே போயிருக்கிறது என்று தேட வேண்டாம், மானியத்திற்கான பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் போட்டதைத்தான் மோடி சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.