இந்தியாவில் இரண்டாம் கட்ட ஏழைகள் என்றால் அது நடுத்தர மக்கள் தான். அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு அலுவலகங்களே அரசாங்கத்திடம் வரி பிடித்தம் செய்து செலுத்தி விடும். வரும் வருமானத்தை அரசுக்குத்தெரியாமல் மறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. வரி பிடித்தம் போகத் தான் மீதிச் சம்பளம் வங்கிக் கணக்குக்கு வரும். அப்படிப்பட்ட நடப்புப் பிரச்னைகளை அதிகம் சந்திப்பவர்கள் இந்த பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறார்கள்..?
அதுக்கு மட்டும் எட்டு லட்சமா..?
தேர்தலில் வெற்றி பெற பாஜக தன் இட ஒதுக்கீடு எனும் அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது. Forward Caste முன்னேறி சாதிகளாக பட்டியலிடப்பட்டவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதிலும் இந்த முன்னேறிய சமூகமாக பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால் அவர்கள் ஏழைகளாக கருதப்பட்டு இட ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களாகச் சொல்லி இருக்கிறார்கள். மத்திய நடுத்தர வர்க்க மக்களோ "சார், 8 லட்சத்துக்கு கீழ ஆண்டு வருமானம் உள்ளவங்க ஏழை-ன்னு சொல்லிட்டீங்க. அப்ப வருமான வரி வரம்பையும் கொஞ்சம் கவனிச்சா நல்ல இருக்கும்" என காதைக் கடிக்கிறார்கள்.
அந்த 80சி
சம்பள தாரர்களின் சொர்க்க புரியாக இருக்கும் ஒரு வருமான வரிச் சட்டம் அந்த 80சி தான். இந்த சட்டப் பிரிவின் கீழ் தான் பிஎஃப் தொடங்கி லைஃப் இன்ஷூரன்ஸ் வரை எல்லாமே இந்த 80 சி-ன் கீழ் தான். அந்த வரம்பு இப்போது ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாயாக இருக்கிறது. அதை குறைந்தபட்சம் ஒரு 3 லட்சமாக உயர்த்தினால் நன்றாக இருக்குமாம்.
கொஞ்சம் இறக்கம் காட்டுங்க
கடந்த 2018 - 19 பட்ஜெட்டில் Standard Deduction என்கிற பெயரில் 40,000 ரூபாயை அறிவித்தது மத்திய அரசு. இந்த முடிவு வரவேற்கத் தக்கது தான். ஆனால் இன்றைய விலை வாசிக்கு போக்குவரத்து மற்றும் மருத்துவத்துக்கு ஒரு நபருக்கே 40,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. எனவே இந்த தொகையையும் ஒரு 60 - 70 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தினால் கொஞ்சம் வசதியாக இருக்கும் என விண்ணப்பிக்கிறார்கள்.
அந்த 24-ம் சட்டப் பிரிவு
வருமான வரிச் சட்டம் பிரிவு 24, வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டித் தொகையை மட்டும் கழித்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த பிரிவின் கீழ் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கழித்துக் கொள்ளலாம். ஆனால் நடுத்தர மக்களோ இந்த தொகையை அப்படியே 1 லட்சம் கூட்டி 3 லட்சம் ரூபாயாக அறிவித்தால் ஓகே என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications