இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி இந்திய ஐடித்துறையில் கடந்த நிதியாண்டில் மோசமான நிலையில் இருந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை இந்த வருடம் சிறப்பான முறையில் உயர்ந்துள்ளது எனத் தெரிகிறது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்சில் ஆகிய 4 முன்னணி நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டில் டிசம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில் மட்டும் சுமார் 70,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. இது 2017-18ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகம் என்பது வியப்புக்குரிய விஷயம்.

சுமார் 46 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த 4 நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் வெறும் 13,972 பேரை மட்டுமே பணியில் அமர்த்திய நிலையில் இந்த வருடத்தின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இத்துறை மீண்டும் வளர்ச்சி பாதைக்குச் சென்றுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஆட்டோமேஷனில் இறங்கிய காரணத்தால் கடந்த நிதியாண்டில் சில நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் குறைவான ஊழியர்களையே பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.
டிசிஸ் நிறுவனத்தில் இந்த வருடம் சுமார் 22,931 பேரைப் பணியில் அமர்த்தியுள்ளது, இதோடு 28,000 மாணவர்களுக்குக் கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளது. கடந்த வருடம் இதே டிசிஎஸ் வெறும் 3,657 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பை அளித்தது. இதேபோல் இந்த 9 மாத காலத்தில் இன்போசிஸ் 21,398 பேரையும், ஹெச்சிஎல் 12,247 பேரையும், விப்ரோ 12,456 பேரையும், பணியில் அமர்த்தியள்ளது.


Click it and Unblock the Notifications