ரியல் எஸ்டேட் விற்பனையிலும் சரி, புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களைக் கொண்டு வருவதிலும் சரி இந்தியாவின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் தென் இந்தியாவில் நல்ல முன்னேற்றம் உள்ளது என ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனராக் (Anarock) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் விற்பனை 2018-ல் 20 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.
அதே 2018-ம் ஆண்டில் வடக்குப் பகுதியில் 18 சதவிகிதமும், கிழக்குப் பகுதிகளில் 15 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறதாம்.
புதிய திட்டங்கள்
ரியல் எஸ்டேட் திட்டங்களைக் கொண்டு வருவதில் ஒட்டு மொத்த இந்தியாவில் 77% புதிய திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் 16% தில்லியிலும், மும்பை மற்றும் புனே பகுதிகளில் 17 சதவிகிதமும் கொண்டு வந்திருக்கிறார்களாம்.
தேக்கம் குறைவு
மிக முக்கியமாக கட்டி முடித்த வீடுகள் தேங்கிக் கிடப்பதில் தென் இந்திய நகரங்கள் கீழே இருக்கின்றனவாம். மொத்தமாக கட்டி முடித்த வீடுகளில் வெறும் 19 சதவிகித (6,73,000) வீடுகள் தான் விற்கப்படாமல் இருக்கிறதாம். ஆனால் தில்லியில் மட்டும் சுமார் 28 சதவிகித கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை ஆகாமல் தேங்கி நிற்கிறதாம்.
தென் இந்தியா முன்னேறும்
எனவே தென் இந்திய நகரங்களில் தான் ரியல் எஸ்டேட் எந்த மாதிரியான சிக்கல்கள் வந்தாலும் விரைவில் மீண்டும் வந்துவிடுகிறார்கள் என கணித்திருக்கிறது அனராக். தென்னிந்தியாவில் 2018-ல் வீடு வாங்கியவர்களில் பெரும்பாலானோர்கள் ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த வேலைகளில் இருந்தவர்கள் தான் அதிகம் வாங்கி இருக்கிறார்களாம்.
ஏற்ற இறக்கத்தோடு தான்
ரியல் எஸ்டேட் துறைக்கு 2018-ம் வருடம் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடனேயே முடிந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் துறை கொள்கைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட தாக்கம் நாளடைவில் குறைந்துள்ளது.
மீண்டு வரும்
தற்போது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ரியல் எஸ்டேட் துறை மீண்டு வரும் அறி குறிகளைப் பார்க்க முடிகிறது என அனராக் நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தோஷ் குமார் கூறியுள்ளார். குடியிருப்பு வீடுகள் மட்டுமல்லாமல், சிறு வணிகம் மற்றும் தொழில் அலுவலகப் பிரிவும் தென்இந்திய நகரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றார்.
வணிக பயன்பாடுகள்
அனராக் என்ற ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி, தென் இந்திய நகரங்களில், வணிக ரீதியிலான ரியல் எஸ்டேட் விற்பனை 21 மில்லியன் சதுர அடி வரை விற்பனையாகி உள்ளதாம். ஆனால் தில்லியில் வணிக பயன்பாடுகளுக்கான ரியல் எஸ்டேட் பிரிவில் மொத்தமாகவே 6 மில்லியன் சதுர அடி மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாம்.
ஒட்டு மொத்த வளர்ச்சி
"ரியல் எஸ்டேட் துறையைப் பொருத்தவரை 2018-ம் ஆண்டில் தென் இந்திய நகரங்களில் உற்சாகமான போக்கு நிலவி வந்ததை மிகத் தெளிவாக உணர முடிகிறது. ரியல் எஸ்டேட் தொடர்பான நிபுணத்துவம் மிக்க, முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் மூலம் அவர்கள் பலன் அடைந்துள்ளார்கள். இதனை ரெரா சட்டத்துக்கு முன் மட்டுமல்ல, ரெரா சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதற்கு பின்னும் காண முடிகிறது" என்று சந்தோஷ் குமார் கூறினார்.


Click it and Unblock the Notifications