டெல்லி: நாடு முழுவதும் பட்டாசுகளால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது என கூறி அவற்றை முழுவதும் தடை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுபற்றி நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதில், மத்திய அரசு சார்பில் கூடுதல் வழக்கறிஞர் நட்கர்னி ஆஜரானார். வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் "தீபாவளி, பிறந்த நாள் போன்ற தருணங்களிலும் கொண்டாடங்களிலும் மட்டும் பயன்படுத்தும் பட்டாசுகளில் இருந்து வரும் புகையின் அளவு விவரங்கள் ஏதாவது மத்திய அரசிடம் இருக்கிறதா..?" என கேள்வி எழுப்பினார்கள்.

"அதோடு இருசக்கர வாகனங்கள் தொடங்கி கண ரக வாகனங்கள், ரயில், விமானம் போன்ற அனைத்து போக்குவரத்து வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவு குறித்தும் சரியான தரவுகள் இருக்கிறதா..?" எனவும் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த இரண்டு விவரங்களும் நம் கையில் இல்லாத போது குறிப்பாக சரியான ஆதாரங்கள் இல்லாத போது எப்படி பட்டாசுகளால் தான் அதிக மாசடைகிறது என முடிவுக்கு வர முடியும் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அதோடு இந்தியாவில் ஏகப்பட்ட கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரை பல தரப்பட்ட மக்கள் இந்த பட்டாசு தயாரிப்பு, வியாபாரம், ஏற்றுமதி போன்ற தொழில்களை நம்பி இருக்கிறார்கள். பட்டாசுக்கு தடை விதித்தால் அத்தனை பேரின் வேலையும் பறி போய் பொருளாதார உதவி அற்றவர்களாகி விடுவார்கள். அப்படி ஒரு கடினமான சூழலை உருவாக்க, இருக்கு வேலை வாய்ப்புகளை பறிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என பட்டாசுக்கு தடை விதிக்க மறுத்ததோடு வழக்கையும் தள்ளுபடி செய்தார்கள்.


Click it and Unblock the Notifications