டெல்லி: இந்திய துறைமுக நிறுவனங்களில் முதன்முறையாக 200 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தை கையாண்ட நிறுவனமாக, குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள அதானி போர்ட்ஸ் நிறுவனம் திகழ்கிறது.
கடந்த2018- 2019ம் நிதியாண்டில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் கையாண்ட சரக்கு 200 மில்லியன் டன்னையும் தாண்டியுள்ளதாம். இதுவரை எந்த ஒருசரக்கு போக்குவரத்து நிறுவனமும் இந்த அளவு பதிவு செய்யவில்லை. இது குறித்து அதானி போர்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி கூறியதாவது:

கடந்த2013- 2014-ம் நிதியாண்டில் 100 மில்லியன் டன்களை கையாண்ட நாங்கள், தற்போது அடைந்திருக்கும் இலக்கை 2020-க்குள் அடைய வேண்டும் என நிர்ணயித்திருந்தோம். ஆனால் முன்னதாகவே அடைந்தற்கு காரணம், தொழில் முறையில் நாங்கள் பல நுட்பமான தொழில் அம்சங்களை பயன்படுத்தியதே என்கிறார்.
அதானி நிறுவனத்தின் முந்த்ரா, தம்ரா ஆகிய இரண்டு துறைமுகங்களும் சரக்கு போக்குவரத்தில் முன்னிலையில் இருப்பதாகவும், எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்கள் கணிசமான முறையில் பங்கேற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
துறைமுகத்திற்கு அருகிலேயே ரயில் மற்றும் போக்குவரத்து சாலைகள், துறைமுகத்தில் பரந்து விர்ந்த வளமான கடற்கரை, நவீன உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுடன் கூடிய துறைமுக வசதி, கப்பல்களை அதிக நேரம் காத்திருக்க வைத்திருக்காமல் விரைவில் வேலைகளை முடித்துக் கொடுத்தல், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைவான கட்டணம் வசூலிப்பதுமே இந்த வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார் கரண்.
மேலும் இந்த சாதனை இந்திய துறைமுக வருமானத்தில் மிகப் பெரிய பங்களிப்பாகவும், இந்திய பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக 1 லட்சம் பேருக்கு இதன்மூலம் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாட்டின் மொத்த துறைமுகங்களின் பங்களிப்பில் அதானி போர்ட்ஸ் 24% பங்களித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். எது எப்படியோ இந்தமாதிரியான பல நிறுவனங்களை ஊக்குவித்தாலே இந்தியா பொருளாதாரம் மேன்மையடையும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications