டெல்லி: மத்திய ரிசர்வ் வங்கி இன்று காலை பணக் கொள்கை கமிட்டி முன்னிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துக் கொண்டது.
அதோடு இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சியும் 2019 - 20 நிதி ஆண்டுக்கு 7.2 சதவிகிதமாக இருக்கும் எனவும் கணித்திருக்கிறது.
இதற்கு முன் கடந்த பிப்ரவரி 2019-ல் நடந்த பணக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என கணித்திருந்தது.
வளர்ச்சி குறைவு
ஆனால் இந்த ஏப்ரல் 2019 பணக் கொள்கை கூட்டத்தில் 2019-ம் ஆண்டில் எல் நினோ காரணமாக இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய மழைப் பொழிவு குறைவது மற்றும் உலகப் பொருளாதாரங்களில் நிலவும் ஒரு நிலையற்ற தன்மை காரணமாக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் கொஞ்சம் குறையும் என கணித்திருக்கிறார்களாம்.
உலகப் பொருளாதாரம் பாதிப்பு
உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் ஒரு சிறிய தேக்க நிலை நேரடியாக இந்திய ஏற்றுமதிகளை பாதிக்கும் எனவும் ஆர்பிஐ எச்சரித்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் பாசிட்டிவ் பக்கங்களில் தொடர்ந்து வரும் முதலீடுகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறது ஆர்பிஐ.
செலவுகள் வழி நடத்தும்
அதோடு 2019 - 20 நிதி ஆண்டில் அதிகம் செலவு செய்யும் விதத்தில் வருமான வரித் துறை ஐந்து லட்சம் ரூபாய் வரை வரிக் கழிவு கொடுத்திருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறது. இதனால் கிராம புறங்களில் தனி நபர் நுகர்வு மற்றும் குடும்ப நுகர்வு அதிகரிக்கும். இந்த நுகர்வு தான் இந்தியப் பொருளாதாரத்தையே நகர்த்தும் எனவும் சொல்லி இருக்கிறது. இதனால் இந்தியாவின் வியாபாரத்துக்கான எதிர்பார்ப்புகள் பாசிட்டிவ்வாகவே இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறது.
முதல் பாதி & அடுத்த பாதி
2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) 6.8 முதல் 7.1 சதவிகிதமாகவும், 2019 - 20-ன் இரண்டாம் பாதியில் (அக்டோபர் முதல் மார்ச்) 7.3 முதல் 7.4 சதவிகிதம் வரையும் வளர்ச்சி இருக்கும் எனக் கணித்திருக்கிறது ஆர்பிஐ.


Click it and Unblock the Notifications