டெல்லி: கடந்த சில மாதங்களாக பிசினஸ் விவகாரங்களில் தம்பியை மீட்கும் அண்ணன்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதற்கு சிறந்த உதாரணம் அம்பானி சகோதரர்கள். முகேஷ் அம்பானி அவரின் தம்பி அனில் அம்பானி கொடுக்க வேண்டிய 550 கோடி ரூபாய் கடனை கொடுத்து தம்பியின் சிறைவாசத்தைத் தடுத்தார்.
அதே போல உலகின் இரும்பு மனிதரான lakshmi mittal தன்னுடைய தம்பி ப்ரொமோத்-க்கு பதிலாக 2,200 கோடி ரூபாய் செலுத்தி அனைத்து சட்டப் பிரச்சினைகளில் இருந்தும் தம்பியை மீட்டார்.
பாசம்
இப்படி ஒரு பக்கம் விசுவின் திரைப்படம் போல அண்ணன் தம்பிக்குள் ஒற்றுமை வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதே இந்தியாவில் தற்போது பெரிய பிசினஸ்மேன்களாக இருந்த அண்ணன் தம்பிகள் இருவருமே ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். அவ்வளவு ஏன் நீதிமன்றங்களில் கூட இருதரப்புகளாகப் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வழக்கைச் சொல்லவில்லை
இந்த புகழுக்கு சொந்தக்காரர்கள் ranbaxy நிறுவனத்தின் நிறுவனர்களான ஷிவேந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங். கடந்த 2008 ஆம் ஆண்டு ரான்பாக்ஸி நிறுவன பங்குகளை Daiichi Sankyo என்கிற ஜப்பானிய நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள். அப்படி விற்கும் போது ரான்பாக்ஸி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்தில் ஒரு வழக்கு பாக்கி இருப்பதைப் பற்றிச் சொல்லவில்லை.
4000 கோடி கொடு
எனவே ரான்பாக்ஸி தங்களை ஏமாற்ற வேண்டும் என்று இந்த வழக்கு பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் பங்குகளை விற்று விட்டதாகச் சொல்லி வழக்குத் தொடுத்திருக்கிறது ஜப்பானிய நிறுவனம். இந்த வழக்கை சிங்கப்பூர் ஆர்பிட்ரேஷன் தீர்ப்பாயம் விசாரித்தது. அதன் பிறகு தற்போது இந்திய உச்ச நீதிமன்றம் விசாரித்து மார்ச் 14, 2019-க்குள் ஜப்பானிய நிறுவனத்துக்கு நஷ்ட ஈடாக 4 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
பதில் கடிதம்
கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 05, 2019 அன்று உச்சநீதிமன்றமே அண்ணன் தம்பி இருவரையும் கண்டித்திருக்கிறது. ரான்பாக்ஸி நிறுவனத்திடமிருந்து வரும் பதில் கடிதங்கள் திருப்திகரமாக இல்லை எனவும், மேற்கொண்டு ranbaxy நிறுவனர்கள் உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் நடந்து கொண்டாலோ அல்லது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறினாலோ சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் எச்சரித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.


Click it and Unblock the Notifications