டெல்லி: இந்தியாவின் மிக உயர்ந்த அரசு பதவிகளுக்கு மத்திய அரசின் UPSC தான் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை எல்லாம் நடத்தி வருகிறது.
இந்த UPSC அமைப்பு தேர்வு செய்யும் நபர்கள் எடுக்கும் மதிப்பெண் மற்றும் அவர்களுக்கு இந்திய அரசு வழங்கி இருக்கும் இட ஒதுக்கீடு உரிமைகளை வைத்து ஒரு மதிப்பீடு பட்டியலைத் தயார் செய்யும் .
இந்த பட்டியலின் படி தான் தேர்வானவர்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறைப் பணி அதிகாரிகள், இந்திய காவலர் பணி அதிகாரிகள் என மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கான அதிகாரிகளைத் தேர்வு செய்யும்.
கடினமான தேர்வு
உலகின் மிகக் கடினமான தேர்வுகளில் இந்த UPSC தேர்வும் ஒன்று. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதே கடினம் என்றால் முதலிடம் பிடிப்பது எப்படிப்பட்ட விஷயம் என்பதை நாம் சொல்ல வேண்டுமா என்ன..? 2018-ம் ஆண்டு நடந்த UPSC தேர்வில் தான் Kanishka Kataria முதலிடம் பிடித்திருக்கிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் டேட்டா விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறாராம்.
முதலிடம்
இவர் முதலிடம் பிடித்த உடன் பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டியில் தன் பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்வதாகவும், குறிப்பாக தன் தோழிக்கு நன்றி சொல்லிக் கொள்வதாகவும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். உங்கள் தோழியைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா..? என்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் கொஞ்சம் சிரித்தமேனிக்கு மழுப்பி இருக்கிறார் இந்த புதிய ஐஏஎஸ் அதிகாரி.
ஐஐடி
UPSC தேர்வில் கணிதத்தை தன் விருப்பப் பாடமாக எடுத்து தேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஐஐடி பாம்பேயில் தன் பி.டெக் இளங்களைப் பட்டத்தைப் பெற்றிருக்கிறாராம். இவர் மத்திய அரசின் நான்கு பிரிவுகளில் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர். இதுவரையான இந்திய ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் UPSC தேர்வு முடிவுகள் வரலாற்றிலேயே முதல் முறையாக தன் தோழிக்கு பகிரங்கமாக நன்றி சொல்லியது இவராகத் தான் இருக்கும் எனவும் பல சமூக வலைதளப் பதிவுகளில் பாசிட்டிவ்வாக ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
எத்தனை பேர்
கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த UPSC தேர்வில் மொத்தம் 759 பேரை மத்திய அரசின் குரூப் ஏ பதவிகளுக்கும், 106 பேரை குரூப் பி பதவிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் 180 பேருக்கு இந்திய ஆட்சிப் பணிகளுக்கும், 30 பேருக்கு இந்திய வெளியுறவுத் துறை பணிகளுக்கும், 150 பேருக்கு இந்திய காவல் பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்திருக்கிறார்களாம் பாக்கி 384 பேருக்கு மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications