டெல்லி: பாரதிய ஜனதா கட்சி இன்று தன் 2019 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது. அதில் வருமான வரி வரம்புகளைக் குறைப்பது பற்றியும் சொல்லி இருக்கிறார்கள்.
மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தனி நபர்கள் உட்பட வருமான வரி வரம்புகள் குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி 01, 2019 அன்று வெளியிட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிலேயே பாஜக அரசு நிலையான கழிவுகளை 40,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக உயர்த்தியது, வீடுகளுக்கான Notional rent-களை ரத்து செய்தது, வரி செலுத்த வேண்டியவர்களுக்கான வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வந்தால், செலுத்த வேண்டிய மொத்த வரிக்கும் வரித் தள்ளுபடி செய்தது என நடுத்தர குடும்பங்களை குளிர்வித்தது பாஜக.
பொருளாதாரத்துக்கு நல்லது
இப்படி நடுத்தர குடும்பங்களுக்கு வருமான வரியைக் குறைத்துக் கொண்டால், அந்த நடுத்தர மக்களிடம் நிறையப் பணம் புழங்கும். அந்தப் பணம் முழுவதும் செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். எனவே உற்பத்தி செய்து வைத்திருக்கும் பொருட்கள் விற்கப்படும். சேவைகளுக்கு பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள். இந்தியப் பொருளாதாரம் வளரும் எனச் சொல்கிறார்கள் பாஜகவினர்.
நிலையான வரி வேண்டும்
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்த வருமான வரிகளைக் குறைத்துக் கொள்வது, வரி வருமானங்களை அதிகரிக்கச் செய்வது, நிறைய பேரை வரி தாக்கல் செய்ய வைப்பது, நிலையாக வரி வருமானத்தைப் பெறுவது என ஒரு பெரிய திட்டத்தொடு இருக்கிறார்களாம்.
பொருளாதாரம் வளரும்
நம் இந்தியப் பொருளாதாரம் தொழில்முனைவோர்கள் மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த இருக்கிறது. எனவே எளிமையான மற்றும் குறைந்த வரி விகிதங்கள் இந்தியப் பொருளாதாரத்தை வளர்க்கும். அதே நேரத்தில் நிறைய பேரை வரி தாக்கல் செய்ய வைக்கும் எனச் சொல்கிறார்கள் பாஜகவினர்.
வரலாறு உச்சம்
பாஜக ஆட்சிக் காலத்தில் வருமான வரி மற்றும் ஜிடிபிக்கான விகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த 2013 - 14 நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 10.1% மட்டுமே வரியாக இந்திய அரசுக்கு வந்தது. அதாவது 100 ரூபாய் ஜிடிபி என்றால் அதில் 10.1% வரியாக அரசுக்கு வந்திருக்கிறது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 12% வரியாக அரசுக்கு வந்திருக்கிறது.
எனவே இதே போல வருமான வரி வரம்பைக் குறைப்போம், வரி செலுத்துபவர்களை அதிகரிக்கச் செய்வோம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications