மும்பை: எப்போதுமே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இவ்வளவு முதலீடுகள் வந்திருக்கிறது என்று தானே செய்தி படிப்போம். இப்போது இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடுகளைக் குறித்துப் படியுங்களேன்.
மார்ச் 2019 மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 2.69 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறார்களாம்.

இது கடந்த மார்ச் 2018-ல் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் செய்த முதலீடுகளை விட 18 சதவிகிதம் அதிகம் என உச்சி முகர்ந்திருக்கிறது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா.
கடந்த மார்ச் 2018-ல் இந்திய நிறுவனங்கள் வெளி நாடுகளில் 2.28 பில்லியன் டாலர் வரை மட்டுமே முதலீடு செய்திருந்தார்கள். அவ்வளவு ஏன் கடந்த பிப்ரவரி 2019-ல் கூட இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 1.71 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்திருந்தார்கள்.
சரி மார்ச் 2019-க்கு வருவோம். மார்ச் 2019-ல் செய்த 2.69 பில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீடுகளில் 1.68 பில்லியன் டாலர் கடனாகவும், 564.97 மில்லியன் டாலர் பங்குகளாகவும், 443.71 மில்லியன் டாலர் கேரண்டிக்களாகவும் முதலீடு செய்திருக்கிறார்களாம்.
மொத்த 2.69 பில்லியன் டாலரில் டாடா ஸ்டீல் நிறுவனம் மட்டும் 1.15 பில்லியன் டாலரை வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். டாடா ஸ்டீல் நிறுவனம் தனக்கு கீழ் இருக்கும் ஒரு சிங்கப்பூர் துணை நிறுவனத்துக்கு இந்த முதலீடுகளைச் செய்திருக்கிறார்கள். தனிப்பட்ட நிறுவனமாக வெளி நாடுகளில் அதிக தொகை முதலீடு செய்த பெருமை நம் டாடா ஸ்டீல் நிறுவனத்தையே சேரும்.
டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு அடுத்த படியாக ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் நிறுவனம் தனக்கு கீழ் ஒருங்கிணைந்த அரபு அமீரகத்தில் இருக்கும் தன் துனை நிறுவனத்துக்கு 82 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.
Oil and Natural Gas Organisation - ONGC நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களோடு கூட்டு நிறுவனமாக செயல்பட்டு தன் வியாபாரத்தை பெருக்க ஒப்பந்தங்களை மேற் கொண்டிருக்கிறது. அதன் படி மியான்மர், ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளில் சுமார் 71 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications