டெல்லி : இந்தியாவில் கடந்த 2018- 2019- ம் ஆண்டில் காப்பர் ஏற்றுமதி 70 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் அளவு 1.1 பில்லியன் டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், காப்பர் இறக்குமதியானது அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகஅரசால் மூடப்பட்டுள்ளது. அதைத் திறக்க வேதாந்தா நிறுவனம் என்னென்னவோ செய்து பார்க்கிறது.
ஆனால் இதுவரை ஆலை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக வேதாந்தா நிறுவனத்தின் காப்பர் ஏற்றுமதியில் பெரும் அடி விழுந்துள்ளது.
உற்பத்தி அடியோடு காலி
தூத்துக்குடி நிறுவனத்தின் வருடாந்திர உற்பத்தி 4 லட்சம் டன்கள் ஆகும். இது தற்போது அடியோடு நின்று போய் விட்டது. ஒட்டுமொத்த நாட்டின் காப்பர் உற்பத்தியில் இது 40 சதவீதம் ஆகும். இதன் காரணமாக இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது.
காப்பரின் இறக்குமதி அதிகரிப்பு
மறுபக்கம் இந்தியாவின் காப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட காப்பரின் மதிப்பு, கடந்த 2017 - 2018 -ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்டதற்குச் சமம் என அறிக்கைகள் மூலம் தெரிகிறது.
காப்பரின் ஏற்றுமதி வீழ்ச்சி
ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2017 - 2018- ம் ஆண்டில் காப்பரின் ஏற்றுமதி 3.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதுவே 2018 - 2019 - ம் ஆண்டில் 1.1 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலை
இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்ட நிலையில், அதை உச்ச நீதி மன்றம் மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து உற்பத்தி குறைந்து விட்டதால் சீனாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது சீனாவிலிருந்து காப்பர் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications