ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் நிதி நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் நிதி நிறுவனம், முகேஷ் அம்பானியின் தொலைத் தொடர்பு நிறுவனமான 'ரிலையன்ஸ் ஜியோ' வில் சுமார் 14 ஆயிரம் கோடி முதல் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்ய உள்ளதாக ஜேபி மார்கன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சாஃப்ட் பேங்க் நிறுவனம் நீண்ட கால அடிப்படையில் வலிமையான முதலீட்டாளராக உள்ளதால், இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்வது என்பது ஆச்சர்யமளிப்பதாக இல்லை என்று ஜேபி. மார்கன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
சந்தை மதிப்பு ரூ.8.81 லட்சம் கோடி
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் துரப்பன பணிகளில் ஈடுபட்டுவருவது அனைவரும் அறிந்ததே. இதன் இன்றைய சந்தை மதிப்பானது சுமார் ரூ.8.81 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் உள்ள நிறுவனமாகும்.
ரிலையன்ஸில் நுழையும் ஆரம்கோ
கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஆரம்கோ நிறுவனம் வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதன் மதிப்ப சுமார் ரூ.69000 கோடி முதல் ரூ.1,04,000 கோடியாகும். ஆனாலும் இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஜியோவில் நுழையும் சாஃப்ட் பேங்க்
தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் நிதி நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சாஃப்ட் பேங்க் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துமாரா 50 மேரா 50
சாஃப்ட் பேங்க் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளை வாங்குவது குறித்து கடந்த 2 ஆண்டுகளாகவே பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. ஆனாலும் இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வாய் திறக்காமல் மவுனம் காக்கிறது.
ஜேபி மார்கன் அறிக்கை
ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்வது குறித்து ஜேபி. மார்கன் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சாஃப்ட் பேங்க் நிதி நிறுவனம் நீண்ட கால அடிப்படையில் வலிமையான முதலீட்டாளராக உள்ளதால், தன்னுடைய முதலீடுகளை செய்வதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்று ஜேபி. மார்கன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
30 கோடி சந்தாதாரர்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ, 4ஜி தொழில் நுட்பத்திலான அதிநவீன உயரிய தொலைதொடர்பு சேவையில் களமிறங்கியது. அன்று முதல் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த 2 ஆண்டகளாகவே ரிலையன்ஸ் ஜியோவின் மீது சாஃப்ட் பேங்க் நிறுவனம் தனது பார்வையை அழுத்தமாக பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் சந்தை மதிப்பு ரூ.3.50 லட்சம் கோடி
சாஃப்ட் பேங்க் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 50 சதவிகித பங்குகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜியோவின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.3.50 லட்சம் கோடி என ஜேபி.மார்கன் கணித்துள்ளது. அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2.45 லட்சம் கோடியாகும்.
கடன் சுமை குறைந்தது
ரிலையன்ஸ் ஜியோ இதுவரையிலும் சுமார் 7 லட்சம் கிமீ, கம்பி வடப்பிரிவு (Fibre) மற்றும் தொலை தொடர்பு கோபுரங்கள் (Underdevelopment Towers) பிரிவையும் இரு தனி நிறுவனங்களின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதனால் 2018-19ஆம் நிதியாண்டின், ஜனவரி-மார்ச் பருவத்திலான நான்காவது காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் நிகர கடன் சுமார் ரூ.2.32 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இது, மூன்றாவது காலாண்டில் ரூ.2.98 லட்சம் கோடியாக இருந்தது என்று ஹெச்எஸ்பிசி குளோபல் ரிசர்ச் (HSBC Global Research) தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
வாங்குவதற்கு ஆர்வம்
தினந்தோறும் பெருகி வரும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் வருவாய், குறைந்து வரும் கடன் சுமை போன்றவற்றால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில், சாப்ட் பேங்க் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications