டெல்லி: அமெரிக்காவில் படிக்கும் 11.7 லட்சம் மாணவர்களில் 50 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் இந்தியர்களும் சீனர்களும் தான் எனச் சொல்கிறது அமெரிக்கா. இந்த கணக்கு கடந்த 31 மார்ச் 2019 நிலவரப்படிச் சொல்கிறார்களாம்.
எண்ணிக்கைப் படி அமெரிக்காவில் 11.7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்களாம். அதில் 5.8 லட்சம் பேர் இந்தியர்களும், சீனர்களும் தானாம். பொதுவாக இப்படி கல்விக்காக அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு F Visa அல்லது M Visa வழங்கப்படுமாம். பொதுவாகவே இந்தியர்கள் பட்ட மேற்படிப்புகளிலும், சீனர்கள் பட்டப் படிப்புகளிலும் பெரிய அளவில் எண்ணிக்கையில் ஆளுமை செலுத்துகிறார்களாம்.
அமெரிக்காவில் student and exchange visitor information system (SEVIS) திட்டத்தின் கீழ் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சம். அதில் 75 (1.57 லட்சம் பேர்) சதவிகிதத்தினர், பட்ட மேற்படிப்பு (Post Graduate) படிக்கிறார்களாம். 11 சதவிகிதத்தினர் பட்டப் படிப்பும், 10 சதவிகிதத்தினர் ஆராய்ச்சிகளையும் மேற் கொண்டு வருகிறார்களாம்.
சீனா
சீனாவை எடுத்துக் கொண்டால், அமெரிக்காவில் மார்ச் 2019 நிலவரப்படி 3.69 லட்சம் பேர் படிக்கிறார்களாம். அதில் 31 சதவிகிதத்தினர் (1.14 லட்சம் பேர்) பட்ட மேற்படிப்பும், 37 சதவிகிதம் பேர் (1.37 லட்சம் பேர்) பட்டப் படிப்பும் படிக்கிறார்களாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அமெரிக்காவில் பட்டப் படிப்பு படிக்கும் சீனர்கள் ரொபாட்டிக்ஸ், ஏவியேஷன், பொறியியல் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தி சார்ந்த படிப்புகளை அதிகம் படிக்கிறார்களாம். பொதுவாகவே சீனர்கள் படித்து விட்டு தங்கள் நாட்டுக்கோ அல்லது ஆராய்ச்சிகளிலோ ஈடுபடத் தொடங்கி விடுகிறார்களாம்.
வேலை
ஆனால் நம் இந்திய மாணவர்களோ, பட்டப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்து முடித்த உடன் அமெரிக்காவிலேயே ஒரு நல்ல வேலையில் சில ஆண்டுகளாவது இருந்து, பணி அனுபவத்தோடு இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ போக விரும்புகிறார்களாம்.
புதிய விதி
சமீபத்தில் தான் H1 - B Visa திட்டத்தில் அமெரிக்கா சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்தியர்களுக்கு பொது கோட்டாவில் 60,000 பேருக்கும், அமெரிக்காவிலேயே உயர் படிப்பு படித்தவர்களுக்கான சிறப்புக் கோட்டாவின் கீழ் 25,000 பேருக்கும் விசா வழங்கி வந்த முறையில் ஒரு சிறு திருத்தத்தையும் கொண்டு வந்திருக்கிறது.
பொது கோட்டாவிலும் நிரப்புவோம்
அந்த திருத்தத்தின் படி இந்தியர்களுக்கான பொதுக் கோட்டாவிலும், அமெரிக்காவில் பட்டப் படிப்பு படித்த இந்தியர்களுக்கு விசா வழங்கப்படும் என மாற்றம் கொண்டு வந்திருக்கிறார்கள். இது கண்ணுக்கு தெரியாமல் பெரிய அலவில் இந்திய பல்கலைக்கழகங்களில் படித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 01 - 05, 2019 வரையான ஐந்து நாட்களில் அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 விசா ஆண்டுக்கான விண்ணப்பங்களை வாங்கிக் கொண்டது இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம். 85,000 விசாவுக்கு சுமார் இரண்டு லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications