மும்பை: இந்தியாவில் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூடங்களுக்குப் பின் அதிக அளவில் கடன் வாங்கி இருப்பவர்கள் சேவைத் துறையைச் சார்ந்ததவர்கள் தான். இந்திய வங்கிகள் இந்த சேவைத் துறையினருக்கு 24,15,600 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள்.
கடந்த மார்ச் 2018-ல் 20,50,500 கோடி ரூபாயைத் தான் கடனாகக் கொடுத்திருந்தார்கள். ஆக இந்த ஒரு வருடத்தில் மட்டும் சேவைத் துறைகளுக்கான கடன் கொடுத்திருக்கும் தொகை 13.8 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது
இந்திய வங்கிகள் கடன் கொடுத்திருக்கும் சேவைத் துறையை ஒன்பது பெரும் பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள். இந்த ஒன்பது பிரிவுகளில் வங்கிகள் தான் அதிக கடன் வாங்கி முதலிடத்தில் இருக்கின்றன.
குழப்பம் வேண்டாம்
அதிகம் குழம்ப வேண்டாம். ஒரு வங்கி தன் வியாபாரத்தை நடத்த குறைந்தபட்சம் ஒரு தொகை வேண்டுமே. அப்படி வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்களுக்கான முதலீடுகளை பெரும்பாலும் இந்திய வங்கிகளிடமே வாங்கிக் கொள்கிறார்கள். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும் வங்கிகள், இவர்களையும் ஒரு பிசினஸ் செய்யும் ஒரு நிறுவனமாகத் தான் பார்க்கிறார்கள். ஆக இவர்களும் மற்றவர்களைப் போல ஒழுங்காக தவணைகளைச் செலுத்த வேண்டும். செலுத்தும் வரை பிரச்னை இல்லை.
வங்கிகள்
இப்படி வியாபாரம் செய்வதாக 10 - 12 சதவிகித வட்டிக்கு கடன் வாங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனம், மற்றவர்களுக்கு குறைந்தபட்சம் 16 சதவிகித வட்டிக்காவது விட்டால் தான் பிழைப்பே நடத்த முடியும். ஆக இப்படி வங்கிகளே, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு மார்ச் 2019 நிலவரப்படி 6,41,200 கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள். இதைக் கடந்த மார்ச் 2018 உடன் ஒப்பிட்டால் 26.9 சதவிகித கடன் வளர்ச்சி.
வர்த்தகம்
ஒரு பொருளை வாங்கி, அதை மதிப்புக் கூட்டியோ அல்லது வேறு ஏதாவது சில மாற்றங்களைச் செய்தோ அல்லது வெறுமனே கை மாற்றி விட்டாலோ கூட அவைகளை வர்த்தகம் எனச் சொல்லலாம். அப்படி வியாபாரம் செய்ய இந்திய வங்கிகளிடம் வியாபாரிகள் வாங்கிய கடன் 5,28,200 கோடி ரூபாயாம். இது கடந்த மார்ச் 2018 உடன் ஒப்பிட்டால் 9.1 சதவிகித கடன் வளர்ச்சியாம். மார்ச் 2018-ல் வெறும் 4,66,900 கோடி ரூபாய் மட்டுமே கடன் கொடுத்திருந்தார்களாம்.
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் மந்தமாக இருக்கிறது, கட்டிய வீடுகளை வாங்க ஆள் இல்லை, என ஒரு பக்கம் பில்டர்கள் புலம்பிக் கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் ரியல் எஸ்டேட் பெயர் சொல்லி மார்ச் 2019 நிலவரப்படி 2,02,300 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்களாம். மார்ச் 2018-ல் 1,85,800 கோடி ரூபாயை இந்திய வங்கிகள் ரியல் எஸ்டேட் துறைக்கு கடனாகக் கொடுத்திருந்தார்கள். ஆக இந்த மார்ச் 2019-ல் ரியல் எஸ்டேட்டுக்கான கடன் வளர்ச்சி 8.8 சதவிகிதமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications