மும்பை: இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் இரண்டுமே இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தன. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 363 புள்ளிகள் சரிந்து 38,600 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
நிஃப்டி50 காலை 11,605 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி அப்படியே இறக்கம் கண்டு 11,598 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியான 11,712 புள்ளிகளில் இருந்து இன்று 114 புள்ளிகள் சரிந்து 111,598 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் அடுத்த பரிமாணம் எடுப்பது என எல்லாம் சேர்ந்து இந்திய சந்தையை அடித்துத் துவைத்து விட்டது. அதன் விளைவாக இன்று ஒரே நாளில் 1.24 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துவிட்டது சென்செக்ஸ்.
உலக அளவில் ஆசியச் சந்தைகள், அமெரிக்க சந்தைகள், ஐரோப்பிய சந்தைகள் என அனைத்து சந்தைகளுமே இன்று ரத்தக்களரியில் மிதந்தன. அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 5.58 சதவிகிதம் இறக்கத்தில் வர்த்தகமாயின.
தற்போது ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டால் கூட ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்துக்கும் மிகப் பெரிய அளவில் நஷ்டத்தையும், வணிக ரீதியிலான பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடும் என்கிறார் சாம்கோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் அனலிஸ்ட் உமேஷ் மேத்தா.
இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப் பட்டிருக்கும் 30 பங்குகளில் 25 பங்குகள் விலை சரிந்தும், வெறும் ஐந்து பங்குகள் விலை அதிகரித்தும் வர்த்தகமாயின. சரிவை யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ஹெச் டி எஃப் சி ஆகிய நிறுவனப் பங்குகள் முன்னெடுத்தன.
மும்பைப் பங்குச் சந்தையில் வர்த்தகமான பங்குகளில், 1,634 பங்குகள் விலை இறக்கத்திலும், 831 பங்குகள் விலை அதிகரித்தும், 200 பங்குகள் விலை மாற்றம் இல்லாமலும் வர்த்தகமாயின. சென்செக்ஸின் துறை வாரியான இண்டெக்ஸ்களைப் பார்த்தால், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், மெட்டல், ரியாலிட்டி, கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் அட்டோமொபைல் போன்ற துறைகள் சுமார் 2.8 சதவிகிதம் வரை இறக்கத்தில் வர்த்தகமாயின.


Click it and Unblock the Notifications