லண்டன்: பஞ்சாப் நேஷனல் பேங்க் புகழ் நீரவ் மோடி (Nirav Modi)-க்கு மூன்றாவது முறையாக ஜாமீனை மறுத்திருக்கிறது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம். நேற்று மே 08, 2019 விசாரணைக்கு வந்த நீரவ் மோடி (Nirav Modi) ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிபதி எம்மா அர்புத்நாட்.
நீரவ் மோடி (Nirav Modi)மீது பஞ்சாப் நேஷனல் பேங்கில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 14,000 கோடி ரூபாய்) வங்கி ஊழல் மற்றும் பணச் சலவையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதால் மீண்டும் லண்டன் சிறையிலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு முறை நீரவ் மோடி (Nirav Modi) ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த போதும் "ஜாமீன் கொடுத்த பின் நீதிமன்றத்தில் ஒழுங்காக ஆஜராக மாட்டார்" என்கிற ஒரே காரணத்தினால் தான் ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த முறையும் அதே காரணத்தைச் சொல்லித் தான் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்திருக்கிறர்கள்.
அதோடு 14 பில்லியன் டாலர் மதிப்புள்ள வழக்குக்கு வெறும் 2 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்கை மட்டும் பிணையாக வாங்கிக் கொண்டு நீரவ் மோடி (Nirav Modi)-யை வெளியில் விடுவதும் சரி வராது என்கிற காரணத்தையும் இந்த முறை கூடுதலாக, தெளிவாகச் சொல்லி இருக்கிறார் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற நீதிபதி எம்மா அர்புத்நாட்.
நேற்றைய வழக்கு விசாரணையில் நீரவ் மோடி (Nirav Modi) சார்பாக வாதாடிய வழக்கறிஞர் "தற்போது நீரவ் மோடி (Nirav Modi)-யை அடைத்து வைத்திருக்கும் வாண்ட்ஸ்வொர்த் சிறையின் நிலை, மிக மோசமாக இருக்கிறது. ஒரு சராசரி மனிதனால் வாழ முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்த வழக்குக்கு தேவையான எந்த தயாரிப்புகளையும் அவரால் செய்ய முடியவில்லை. எனவே நீரவ் மோடி (Nirav Modi), ஜாமீனுக்காக, நீதிமன்றம் சொல்லும் எந்த விதியையும் பின்பற்றத் தயாராக இருக்கிறார். இதற்காகவாவது ஜாமீன் கொடுக்க வேண்டும்" என வாதாடி இருக்கிறார்.
இன்னும் ஒரு படி மேலே போய், நீரவ் மோடி (Nirav Modi), மேற்கு லண்டனில் தங்கி இருந்த, தன்னுடைய கவுண்டர் பாயிண்ட் அடுக்குமாடி குடியிருப்பிலேயே, 24 மணி நேர கண்காணிப்போடு வீட்டுச் சிறை வைக்கலாம் எனக் கூட வாதாடி இருக்கிறாராம். இத்தனை வாதாடியும் நீதிபதி எம்மா அர்புத்நாட்டை சமாதானப்படுத்தி ஜாமீன் மட்டும் வாங்க முடியவில்லையாம். நீரவ் மோடி (Nirav Modi)நாடு கடத்தும் வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் மே 30, 2019-க்கு ஒத்தி வைத்திருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications