லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆளும் பாஜக கூட்டணியே அசுர பலத்துடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வருவார் என்று உறுதியாக சொல்லிவிட்டன. அடுத்த நிதியமைச்ச
டெல்லி: ஒரு வழியாக லோக்சபா தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்த கையோடு வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் வந்துவிட்டன. அதில் மீண்டும் பாஜக கூட்டணியே மோக வெற்றி பெற்று நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்று அனைத்து ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுவிட்டன. அதோடு அடுத்த நிதியமைச்சர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளன.
ஒருவேளை பிரதமராக மோடியே வரும்பட்சத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சர் பொறுப்புக்கு அவரின் வலுது கரமான அருண் ஜெட்லிக்கு மீண்டும் வாய்ப்பு தருவாரா அல்லது அவருடைய உடல் நலனை மனதில் கொண்டு அவருக்கு ஓய்வு அளித்துவிட்டு, அதற்கு பதிலாக தற்போது ரயில்வே அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயலை அந்தப் பதவிக்கு கொண்டுவருவாரா என்பது தான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆளும் பாஜக கூட்டணியே அசுர பலத்துடன் அமோக வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வருவார் என்று உறுதியாக சொல்லிவிட்டன. பாஜக கூட்டணியில் அவரைவிட்டால் வேறு யாரும் யாரையும் முன்மொழியப் போவதில்லை.
யார் நிதியமைச்சராக வந்தாலும், அவர் முன் நிழலாடும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று இப்போதைக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து நெருக்கடிகளை எல்லாம் தாண்டி நொண்டியடிக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்புவது.
இரண்டாவதாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துவந்தாலும், இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் உள்ளவர்களின் நுகர்வுத் தன்மை குறைந்து வருகிறது. எனவே இதை எல்லாம் சமாளித்து ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.5 சதவிகித அளவுக்கு உயர்த்தும் வல்லமையும் அசாத்திய திறமையும் உள்ளவரையே நிதியமைச்சர் பொறுப்புக்கு கொண்டுவரவேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.
இத்தனை பிரச்சனைகளையும் தலையில் தூக்கி சுமக்கும் சக்தி வாய்ந்த, பல தலைவலிகளை சமாளிக்கக்கூடிய நாட்டின் நிதியமைச்சர் என்ற உயரிய பதவியை மோடி யாருக்கு தூக்கிக் கொடுப்பார் என்பது தான் மிகப்பெரிய கேள்வி. இப்போதைக்கு மோடியின் மனதில் இருவரின் உருவங்கள் மட்டுமே நிழலாடும்.
முதலாமவர், தற்போது நிதியமைச்சராக இருக்கும் 66 வயதான அருண் ஜெட்லி. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். முக்கிய பிரச்சனைகளை தீர்க்கவும் எளிமையான வழிமுறைகளை கையாள்பவர். மோடியின் வலது கரமாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உள்ளவர். தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை கொண்டுவந்து கடந்த 20 ஆணடுகளாக வரிவிதிப்பு முறையில் இருந்த குழறுபடிகளை தீர்த்து வைத்ததோடு, முஸ்லீம் பெண்களுக்கு எதிரான முத்தலாக் (triple talaq) முறையை ஒழிக்கும் சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசு சார்பில் வாதாடி வெற்றி கண்டவர்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், தனது பேச்சாற்றலாலும், வாதத் திறமையாலும் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி எதிர்கட்சி உறுப்பினர்களையும் நண்பர்களாக ஆக்கிக் கொண்டவர். இதன் காரணமாகவே முதன் முதலில் அவருக்கு மூன்று துறைகளை கவனிக்கும் பொறுப்பை மோடி அவருக்கு வழங்கினார்.
இருந்தாலும், அருண் ஜெட்லி சர்க்கரை நோயாளி என்பதாலும், கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டதாலும், புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சை மேற்கோண்டதாலும், கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை. இவருக்கு பதிலாக பியூஷ் கோயல்தான் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாமவர் தற்போது மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சராக உள்ள 54 வயதே ஆன பியூஷ் கோயல். பட்டயக் கணக்காளரான(Chartered Accountant) இவர் அடுத்த நிதியமைச்சராக வர அதிக வாய்ப்பு உள்ளவராக பார்க்கப்படுகிறார்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது, நிதியமைச்சர் பொறப்பை ஏற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தவர். அதோடு சமீபத்தில் இவர் செய்த மற்றொரு சாதனை, எஸ்பிஐ வங்கியுடன் அதன துணை வங்கிகளை இணைத்தது மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைத்தது.
இவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மாதச் சம்பளதாரர்களுக்கு வரிச் சலுகைகளை அள்ளிக் கொடுத்த காரணத்தினால் தான் பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பு கிட்டியதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அடுத்த நிதியமைச்சராக வரும் வாய்ப்பு இருவரில் யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த கேர் ரேட்டிங் (Care Ratings) நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்நவிஸ் (Madan Sabnavis), இருவரில் யார் வந்தாலும் முக்கியமான முடிவுகளை பிரதமரின் ஆலோசனையை கேட்டே எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications