வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து செயலாற்ற ஆர்வத்துடன் காத்திருப்பதாக சர்வதேச நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் நாடுகளுக்கு கடன் கொடுக்கும் அமைப்பு இது.
இந்தியாவின் சீரமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவை நிறைவேற்ற ஐஎம்எப் உதவி செய்யும் என்றும் ஐஎம்எப் உயர் அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் தொடரவுள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 303 உறுப்பினர்களுடன் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறார் மோடி என்பது நினைவிருக்கலாம்.
தொடர வேண்டும்
இதுகுறித்து ஐஎம்எப் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டும். அதற்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். பண வீக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட வேண்டும். புதிய அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம். அந்த நோக்கத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.
வளரும் சக்தி
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தி என்று கடந்த மார்ச் மாதம் ஐஎம்எப் அறிவித்திருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்துள்ளதாக கூறும் ஐஎம்எப் மேலும் பல காரியங்களைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மக்களுக்குப் பாதிப்பு வராமல்
இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் ஐஎம்எப் பேருதவியாக இருக்கும் என்றாலும் கூட அது போடும் நிபந்தனைகள் மக்களை பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மோடி அரசுக்கு உண்டு. காரணம் முன்பை விட அதிக ஆதரவை மக்கள் அவருக்குக் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications