லோக்சபா தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள மோடிக்காக அவரது பெயரில் குல்பி ஐஸ் தயாரித்து விற்பனை செய்கிறார் ஒரு பாஜக ஆதரவு ஐஸ்கிரீம் கடைக்காரர்.
டெல்லி: சீசனுக்கு ஏற்ப பொருளை விற்பது வியாபாரிகளுக்கு கை வந்த கலை. தற்போதய அரசியல் சீசனுக்கு ஏற்ப புது யுக்தியை புகுத்தியுள்ளார் சூரத் ஐஸ்கிரீம் கடைக்காரர். மோடியின் வெற்றியை கொண்டாடும் விதமாக அவரது முகத்தோற்றத்தில் குல்பியை தயாரித்து விற்பனை செய்கிறார். இன்றோடு அந்த விற்பனையும் முடிகிறது என்று அறிவித்து விடவே, குல்பி விற்பனை மட்டுமல்லாது அந்த கடையில் ஐஸ்கிரீம் விற்பனையும் களைகட்டியது.
கோடை காலத்தில் ஜில்லென்று ஐஸ்கிரீம் சாப்பிட பலரும் விரும்புவார்கள். அதுவும் அரசியல் தலைவர்கள் பெயரில் விற்றால் கேட்கவே வேண்டாம் அந்த கட்சித்தலைவரின் ஆதரவாளர்களே சாப்பிட்டு தீர்த்துவிடுவார்கள். இப்போது சூரத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்காரரும் அப்படித்தான் மோடி முகத்துடன் குல்பியை தயாரித்து விற்பனை செய்கிறார்.

இயற்கையான முறையில் கைகளால் தயாரிக்கப்பட்ட அந்த குல்பி ஐஸ்கிரீம் இன்று வரை மட்டுமே கிடைக்கும் என்று அறிவித்ததை அடுத்து அதனை வாங்க கூட்டம் அலைமோதியது. மோடியின் முகத்தை எப்படி சாப்பிடுவது என்று நினைத்தார்களோ என்னவோ, வேறு ஐஸ்கிரீம்களையும் வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர். இதனால் அந்த கடைக்காரருக்கு கல்லா கட்டியது.
கடந்த 23ஆம் தேதி லோக்சபா தேர்தல் முடிவு வெளியானது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. பாஜக மிக பிரம்மாண்டமான வெற்றியை பெற்று பிரதமராக மீண்டும் மோடியே தேர்வு செய்யப்பட்டார். 30ஆம் தேதி பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதை வைத்து பிசினஸ் ஐடியா யோசித்த குல்பி கடைக்காரர் விவேக் அஜ்மர், மோடியின் முக வடிவில் குல்பி தயாரித்தார் செய்தார்.
மொத்தமே 200 குல்பிதான். 100 சதவிகித இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த குல்பிகளுக்கு 'மோடி சீதாஃபால் குல்பி' என்று பெயரிட்டார். மே 30 ஆம் தேதி வரை 50 சதவிகித தள்ளுபடியில் விற்பனை செய்தார். மோடி குல்பியை ஆவலாய் பார்க்க வந்தவர்கள் விதம் விதமான ஐஸ்கிரீம்களையும் சுவைத்துச்சென்றனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த ஐஸ்கிரீம் ட்ரெண்ட் ஆனது. அஜ்மருக்கு வியாபாரத்தோடு புகழும் சேர்ந்து கிடைத்தது.
எந்த ரசாயனமும் கலக்காத இந்த குல்பியை ஒருவாரம் வரை வைத்து சாப்பிலாமாம் சுவை மாறாமல் இருக்கும் என்கிறார் அஜ்மர். முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்பட்டது இந்த மோடி சீதாஃபால் குல்பி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரத்தில் மோடி சேலைகள் விற்பனை களைகட்டியது. தேர்தல் நேரத்தில் மோடி சேலைகளின் விற்பனைக்கு வரவே பாஜக தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி அணிந்தனர். பெண் தொண்டர்கள் மத்தியில் மோடி சேலைக்கு மவுசு அதிகரித்தது.
தீபாவளி நேரங்களில் நமோ பட்டாசு, மோடி பட்டாசு விற்பனை களைகட்டியது. இப்போது குல்பி விற்பனை ட்ரெண்ட் ஆகியுள்ளது.
மோடி குல்பி எடு பதவிப்பிரமாணத்தைக் கொண்டாடு.


Click it and Unblock the Notifications