உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சியானது நடப்பு 2019-20ஆம் ஆண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் 2.6 சதவிகிதமாக சரிந்துள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பக்க பலமாக இருக்கும் கோர் செக்டார் எனப்படும் எட்டு துறைகளை உள்ளடக்கிய உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சியானது நடப்பு 2019-20ஆம் ஆண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் 2.6 சதவிகிதமாக சரிந்துள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
இதுவே கடந்த 2018-19ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் சுமார் 4.9 சதவிகிதமாக இருந்தது, லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து துறைகளும் முடங்கி இருந்ததால் தான் இத்துறையின் வளர்ச்சி சரிவை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்திய அரசு மாதந்தோறும் பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, மொத்த பணவீக்க விகிதம் மற்றும் நுகர்வோர் பணவீக்க விகிதம் என ஒவவொன்றையும் தனித்தனியாக வெளியிட்டு வருகிறது. அதேபோல் தற்போது நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்திய உள்கட்டமைப்புத் துறையான கோர் செக்டார் என்றழைக்கப்படும் எட்டு துறைகளின் வளர்ச்சி விகிதத்தையும் வெளியிட்டுள்ளது.
உள்கட்டமைப்புத்துறையானது முக்கியமான எட்டு துறைகளை உள்ளடக்கியுள்ளது. அதில் கச்சா எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், இரும்பு, உர உற்பத்தி, நிலக்கரி, சிமெண்ட் மற்றும் மின்சாரம் என அனைத்துமே ஒன்றுக்கொண்று தொடர்புடையாதாக உள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி 4.7 சதவிகிதமாக இருந்த நிலையில் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் நடைமுறைகளால் நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் சுனக்கம் ஏற்பட்டது. இதனால் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
உள்கட்டமைப்பின் முக்கியமான தொழில் துறையோடு தொடர்புடைய கச்சா எண்ணெய் உற்பத்தி, பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி, நிலக்கரி, இயற்கை எரிவாயு, இரும்பு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் என எட்டு துறைகளில் கச்சா எண்ணெய் தவிர மற்ற அனைத்துத் துறைகளுமே வளர்ச்சிடைந்துள்ளன.
நிலக்கரி உற்பத்தி
உள்கட்டமைப்பின் முக்கிய காரணியான நிலக்கரி உற்பத்தியானது கடந்த ஏப்ரலில் 2.8 சதவிகிதமாக உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் சற்று அதிகமாகும். கடந்த 2018-19ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 7.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் உற்பத்தி
கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவிகிதமாக சரிந்துள்ளது. கடந்த 2018ஆம ஆண்டை விட இது குறைவாகும். அதே போல் 2018-19ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 4.1 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டது.
இயற்கை எரிவாயு
இயற்கை எரிவாயு உற்பத்தியானது கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 0.8 சதவிகிதம் மட்டுமே குறைந்து காணப்பட்டது. அதே போல் ஒட்டுமொத்தமாக 2018-19ஆம் ஆண்டில் 0.8 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டது.
பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி
பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தியானது கடந்த ஏப்ரலில் 4.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் ஒட்டுமொத்தமாக கடந்த 2018-19ஆம் ஆண்டில் 3.1 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டது.
உர உற்பத்தி
விவசாயத்திற்கு துணை நிற்கும் உர உற்பத்தியானது கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 4.4 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் கடந்த 2018-19ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 0.3 சதவிகிதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரும்பு
உள்கட்டமைப்பின் மற்றொரு முக்கிய காரணியான இரும்பு உற்பத்தியானது கடந்த ஏப்ரலில் சுமார் 1.5 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் 4.7 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டது.
சிமெண்ட்
சிமெண்ட் உற்பத்தியானது ஏப்ரலில் சுமார் 0.8 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 13.3 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மின் உற்பத்தி
உள்கட்டமைப்பில் மின் உற்பத்தி மட்டுமே சற்று கூடுதலாக உற்பத்தியானது. கடந்த ஏப்ரலில் மின் உற்பத்தியானது சுமார் 5.8 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த 2018-19ஆம் ஆண்டில் 5.2 சதவிகிதம் உயர்ந்திருந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடைய தொழில் துறை வளர்ச்சியை (Index of Industrial Production - IIP) தீர்மானிக்கும் 145 காரணிகளில் உள்கட்டமைப்பை உள்ளடக்கிய 8 துறைகளின் பங்கானது 41 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Click it and Unblock the Notifications