எல்லா பயலும் எங்க கீழ தான்..! மாநில அரசுகளை உடைத்தெரியும் Modi சர்க்கார் 2.0 திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2014-ம் ஆண்டு மோடி என்கிற தனி மனிதரின் அலை பாஜக-வை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்தது. ஆனால் இந்த 2019-ல் மோடி அலை தாண்டி ராணுவ வீரர்களின் சடலம், இந்திய தேசியம், இந்துத்துவம், பீஃப், பாவம், புண்ணியம், சாபம், கொஞ்சம் பாகிஸ்தான் என பல விஷயங்கள் பாஜகவுக்காக ஓவர் டைம் பார்த்தன.

இப்போது மோடி மீண்டும் கூடுதல் பலத்துடன் பாராளுமன்றத்தில் சிம்ம நடை போட்டு நுழைந்திருக்கிறார். அவர் பதவி ஏற்ற போது தூவிய மலர்கள் கூட, டெல்லி வெயிலில் இன்னும் சரியாக வாடி இருக்காது என்றே நினைக்கிறேன். அதற்குள்... இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

அதை மனதாறப் பாராட்டுகிறோம். புதிய அக்மார்க் மோடி பிராண்ட் செயல்பாடுகள், ISI முத்திரை குத்திய மோடி சட்டங்கள், போலோ ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமியர்களை விரட்டிக் கொள்ளும் இந்துத்வவாதிகள் சொல்லிய மும்மொழிக் கொள்கை வரைவுகள்... என மோடியின் 2.0 சிறப்பாகத் தொடங்கி இருக்கிறது.

முதல் அடி

முதல் அடி

தேர்தல் அறிவித்த உடனேயே, சீரியஸாக மோடிக்கு தன் அதரவைத் தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் குட்டு வாங்கிய நிதி அயோக்கின் துணைத் தலைவர் (மோடி தான் தலைவர்) ராஜிவ் குமார் திருவாய் மலர்ந்திருக்கிறார். இந்த முறை மோடி எனும் இந்திய கடவுளுக்கு ஆதரவாக. Modi and His Challenges, Resurgent India: Ideas and Priorities, Exploding Aspirations: Unlocking India's Future என இவர் எழுதிய புத்தகங்கள் அனைத்துமே கார்ப்பரெட் இந்தியாவுக்கு 180 டிகிரி வளைந்து வணக்கம் போடும் ரகம்.

எதிரொலி

எதிரொலி

மோடியின் வளர்ப்புக் கழகமான ஆர் எஸ் எஸ் ஆகட்டும், பாஜகவாகட்டும். இரண்டுமே இந்தியாவை நிர்வாக ரீதியாக எளிதில் ஆழ, ஒன்றிணைக்க, ஒரு கையெழுத்தில் இந்தியாவை ஆளும் கனவை நினைவாக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ராஜிவ் குமார் பக்க பலமாக, உற்ற நண்பராக, 65 வருட திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு புதிதாக உருவாக்கப்பட்ட நிதி அயோக்கின் துணைத் தலைவராக... கலர் பேனாக்களில் ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் சீண்டல்

மீண்டும் சீண்டல்

அந்த ஸ்கெட்ச்களுக்கு, மோடி கையில் இருந்து வரும் அருள் ஒளிக் கதிர்கள் ராஜிவ் குமாரை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றன. அதைப் பற்றித் தான் பெருமையாகப் பேசி பாஜக ஆட்சி செய்யாத, பாஜகவை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களை மீண்டும் சீண்ட இருக்கிறார்கள். I repeat... சீண்ட இருக்கிறார்கள். இப்போது தான் மும்மொழிக் கொள்கை ஓய்ந்தது. அதற்குள்... நில சீர்திருத்தம், தொழிலாளர் நலக் கொள்கை திருத்தம், மாநில அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களில் தனியார்மயம் என மாநில அரசுகளை ஒரண்டைக்கு இழுக்க தயாராக இருக்கிறார்கள் பாஜகவினர்கள்.

சாதனை தான்

சாதனை தான்

இப்படி கிழக்கே, மத்திய அரசின் புதிய பிரச்னைகளை சமாளிக்க வேண்டும் என்றால்... வடக்கே பாஜக கொண்டு வந்த நீட், ஹட்ரோ கார்பன், எட்டு வழிச் சாலை, ஸ்டெர்லைட் என பழைய பிரச்னைகளும் ஏராளம். இத்தனை பிரச்னைகளுக்குத் தெற்கே சமூக நீதியை ஒடுக்கும் பொருளாதார இட ஒதுக்கீடுகள், மத வாதப் பிரச்னைகள், ஜாதியச் சண்டைகளில் மண்டை உடைந்து கொண்டிருக்க... மேற்கே எடுபடாத மாநில அரசு. இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில் உயிரோடு வாழ்வதே தமிழ்நாட்டு (பாஜக ஆட்சி செய்யாத, பாஜகவை ஏற்றுக் கொள்ளாத மாநில) மக்கள் செய்யும் மிகப் பெரிய சாதனை தான். சரி மோடியின் புதிய சீர்திருத்தங்களுக்கு வருவோம்.

முதலீடு தான் முக்கியம்

முதலீடு தான் முக்கியம்

நாங்கள் பதவி ஏற்ற முதல் 100 நாட்களுக்குள், அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வர மிகப் பெரிய மாற்றங்களை, அதி வேகமாகக் கொண்டு வரப் போகிறோம். இந்த அதிவேக மாற்றங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள், தனியார்மயம், நில சீர்திருத்தங்கள், மத்திய அரசுக்கான நில வங்கிகள் சட்டம்... என பிஸ்லெரி தண்ணீர் குடித்த மேனிக்கு அடுக்குகிறார் நிதி அயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார்.

அவன் சந்தோஷம்

அவன் சந்தோஷம்

"அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் இந்தியாவைப் பார்த்து சந்தோஷப்பட காரணங்கள் இருக்கும். அதற்கு மேலே சொன்ன தொழிலாளர் நலச் சட்டங்கள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயம், மாநிலங்களில் நில சீர்திருத்தச் சட்டங்கள், மத்திய அரசுக்கான நில வங்கிச் சட்டங்கள் முக்கியக் காரணங்களாக இருக்கும். அதுக்கு நான் கேரண்டி என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் ராஜிவ் குமார். மாநிலங்களிடம் கேட்டு ஒரு முடிவுக்கு வருவோம் எனச் சொல்லவே இல்லை என்பது தான் வேதனை.

1. நில சீர்திருத்தங்கள்

1. நில சீர்திருத்தங்கள்

சாதாரணமாக நில சீர் திருத்தங்கள் என்றால் சர்வே எண்களில் மாற்றம், பதிவாளர் அலுவலகங்களில் பதிவுச் செய்வதில் புதிய முறைகள், முத்திரைத் தாள் கட்டணம் உயர்வு, பதிவுக் கட்டணம் உயர்வு இப்படித் தான் இருக்கும். ஆனால் நம் பாஜகவினர் கொண்டு வர இருக்கும் நில சீர்திருத்தச் சட்டங்கள் அதுக்கும் மேல... மத்திய அரசு தன் பெயரில், ஒரு கம்பெனியை நிறுவ இருக்கிறார்கள். அந்த மத்திய அரசு நிறுவனம், ஒரு நில வங்கி போல மாநில மற்றும் மத்திய அரசின் நிலங்களையும், மாநில மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் கீழ் இருக்கும் நிலங்களையும் அபுக், அபுக் என விழுங்கப் போகிறது.

ஏன்..?

ஏன்..?

இப்படி அவசரமாக மத்திய அரசு ஏன் மாநில அரசின் நிலங்களையும், மாநில அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் கீழ் இருக்கும் நிலங்களையும் வாயில் போட்டுக் கொள்கிறது..? எனக் கேட்டால். அந்நிய நேரடி முதலீட்டாளர்களுக்கு கொடுகணும்ல... அப்ப தானய்யா தொழில் வளரும்..? என நம்மைக் கேட்கிறார்கள் மத்திய அரசின் அறிவுத் தொட்டிகள் (Think Tank). இப்படித் திரட்டப் படும் நிலங்களை ஒரு Cluster-களாக பிரித்து பிரித்து தொழில் வளத்தைப் பெருக்க இருக்கிறார்களாம்.

வெளிநாட்டவர்கள் பாரட்டுவார்கள்

வெளிநாட்டவர்கள் பாரட்டுவார்கள்

ஒருவேளை நம் கார்ப்பரேட் ஆதரவாளர் ராஜிவ் குமார் சொல்வது போல மத்திய அரசின் நில வங்கி நிறுவனம் அமலுக்கு வந்தால்... அந்நிய நேரடி முதலீடு செய்யும் நிறுவனங்கள் இனி, மாநில அரசிடம் சென்று "ஐயா நான் சைக்கிள் கம்பெனி வெச்சிருக்கேன்... எனக்கு மதுராந்தகம் பக்கம் 23 ஏக்கர் நிலம் வேணும்" என நிற்கத் தேவை இல்லையாம். மத்திய அரசின் ஆதரவு இருந்தால் போதும், 23 ஏக்கர் என்ன, 23,000 ஏக்கர் கூட ஒதுக்கித் தருவார்கள். ஆனால் மத்திய அரசு நினைத்தால் மட்டும். அப்ப மாநில அரசு... போய் மிக்ஸர் சாப்பிடுங்க பாஸ்.

சட்டுன்னு வேல முடியும்

சட்டுன்னு வேல முடியும்

இப்படி மத்திய அரசின் கீழேயே அனைத்து மாநில மற்றும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் இவர்கள் கீழ் வந்தால், எளிதில் நிலங்களை விற்றோ, மற்ற தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியோ அரசுக்கு தேவையான நிதியைத் திரட்டலாம். அதோடு அந்நிய நேரடி முதலீட்டாளர்களுக்கும் தேவையான நிலங்களைச் சட்டென ஒதுக்கீடு செய்துவிடலாம். அந்நிய நேரடி முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் சட்ட ரீதியிலான பிரச்னைகள் இருக்காது என காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறார்கள். இதனால் அந்நிய நேரடி முதலீடு அபரீவிதமாக இருக்கும் எனவும் புன் சிரிப்பு கொடுக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன்

மேலே சொன்னதை அப்படியே ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு பொருத்திப் பாருங்கள்... ஒரு தனியார் நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதாகச் சொல்லி அவர்களுக்கு ஒரு 50 ஏக்கர் நிலம் ஒதுக்கிவிட்டால் பின் மாநில அரசே நினைத்தாலும் நிறுவனங்களைத் தடுக்க முடியாது. அந்த அளவுக்கு மாநில அரசு நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பலமிழந்து விடும். நாளை ஒரு நல்ல தலைவர், முதல்வராக இருந்து மாநில அரசை ஆளத் தொடங்கினால் கூட, மீண்டும் தங்கள் மாநில அதிகாரத்தைப் பெற அதிகம் போராட வேண்டி இருக்கும்.

2. சர்வம் தனியார்மயம்

2. சர்வம் தனியார்மயம்

வாரம் ஒரு பொதுத் துறை நிறுவனத்தை தனியாருக்கு தண்ணீர் தெளித்து, தாரை வார்த்துக் கொடுத்துவிடுங்கள் எனச் சொன்ன அதே நிதி அயோக்... இப்போது கொஞ்சம் சாஃப்டாக "மோடிஜி, இந்த பொதுத் துறை நிறுவனங்கள (குறிப்பா மாநில பொதுத் துறை நிறுவனங்கள்) எல்லாம் ஒழுங்கா நடத்த முடிஞ்சா நடத்தட்டும் இல்லன்னா, தனியார்கிட்ட விலை பேசி வித்து அல்லச் சொல்லுவோம். இந்திய அரசோட, மாநில அரசாங்கத் தோட நிதி நிலையும் கொஞ்சம் சீரடையும்" எனச் சொல்லி வெரி குட வாங்கி இருக்கிறார்கள் இந்த அறிவுத் தொட்டிகள் (Think Tanks).

BSNL ஒரு க்ளாசிக் உதாரணம்

BSNL ஒரு க்ளாசிக் உதாரணம்

மத்திய அரசின் கீழ் இருக்கும் நிறுவனமான BSNL-லேயே ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லை. சம்பளம் கேட்டு வாட்ஸப், ஃபேஸ்புக் வரை வந்துவிட்டர்கள் ஊழியர்கள். அரசு அலுவலகங்களில் தங்களுக்கான தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவையை சில மாதங்கள் முன்பு வரை BSNLயிடம் வாங்கி வந்தார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து ரத்து செய்துவிட்டார்கள். அந்த தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவை டெண்டரை அப்படியே ஜியோவுக்கு தாரை வார்க்கிறார்கள். பிறகு எப்படி BSNL ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்...? பொதுத் துறை நிறுவனத்தை வளர்க்க விரும்பாத அரசாக இருந்துவிட்டு, போதுமான அளவு அலட்சியம் காட்டிவிட்டு, கூடுமான வரை சுரண்டி விட்டு... கம்பெனிக்கு லாபம் வரவில்லை, கம்பெனியை இழுத்து மூடுங்கள் அல்லது தனியாருக்கு நல்ல விலைக்கு விற்று விடுகிறேன் எனச் சொல்வது எந்த வகை நியாயம் எனத் தெரியவில்லை.

 

 

ஜெயித்த இந்திய நிறுவனங்கள்

ஜெயித்த இந்திய நிறுவனங்கள்

Indian Bank, BHEL, Lic, Isro, NTPC, Indian Oil, ONGC என அரசின் உதவியுடன் இன்று வரை தன் வியாபாரத்தில் லாபம் பார்க்கும் இந்திய அரசு நிறுவனங்களும் இதே இந்தியாவில் இருக்கின்றன. உலகின் மிகப் பெரிய நிறுவனமாக ஆண்டுக்கு 111 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர லாபம் பார்க்கும் சவுதி அராம்கோ ஒரு அரசு நிறுவனம் தான் தெரியுமா..? சவுதி அராம்கோ வெளிப்படையாக தன் லாபத்தை பொது வெளியில் சொல்வதற்கு முன் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 58 பில்லியன் டாலர் நிகர லாபம் சம்பாதிக்கும். அதுவரை உலகின் மிகப் பெரிய லாபம் பார்க்கும் நிறுவனமாக இருந்தது ஆப்பிள். ஒரு நல்ல அரசு நிறுவனத்தை எப்படி நடத்த வேண்டும் என இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இப்படி உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் நம் அறிவுத் தொட்டிகளோ (Think Tanks) லாபம் பார்த்தா சரி இல்லையா, வித்து அல்லுங்க சார் என்கிறார்கள்.

3. தொழிலாளர் நலச் சட்டங்கள்

3. தொழிலாளர் நலச் சட்டங்கள்

இந்தியாவின் தொழிலாலர் நலன் சார்ந்து 44 மத்தியச் சட்டங்கள் அமலில் இருக்கின்றன. அவைகளை எல்லாம் ஒருங்கிணைத்து 1. சம்பளம் மற்றும் கூலி, 2. தொழிற்துறை உறவுகள், 3. சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் 4. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச் சூழல் என நான்கு சட்டங்களாகக் கொண்டு வரப் போகிறார்களாம். அதுவும் வரும் ஜூலை - ஆகஸ்ட் 2019-க்குள் கொண்டு வந்தே தீருவேன்... என ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறார்களாம். ஏன் அவசரமாக இந்த சட்டங்களை மாற்ற வேண்டும் என்றால் அந்நிய நேரடி முதலீடுகள், இந்தியாவின் சிக்கலான தொழிலாளர் நலச் சட்டங்களால் பயப்படுகிறார்களாம். அதனால் தான் அவசரமாக இந்தச் சட்டங்களைத் திருத்துகிறார்களாம். அக தொழிலாளர் நலனுக்காக திருத்தவில்லை சரி தானே..?

ஒழுங்கா எழுதுவீங்களா சார்..?

ஒழுங்கா எழுதுவீங்களா சார்..?

நில சீர் திருத்தம் என்கிற பெயரில் இந்தியாவை குறுக்கும் மறுக்குமாக வெட்டி, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்ட நிலத்தை, ஜோடி ஒரு கோடி என விற்கப் போகிறீர்களா..?
மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்கிற தத்துவத்தை உடைத்து நான் தான் எல்லாம், உனக்கு ஒத்த ரூவா வேணும்னா கூட நீ எங்கிட்ட தான் வரணும், கையக் கட்டித் தான் நிக்கணும்... என மாநில அரசுகளின் வருவாயில், ஜிஎஸ்டியை வைத்து சுருட்டி விட்டீர்கள். இப்போது நில சீர் திருத்தச் சட்டங்கள் மூலம் மாநில அரசின் அதிகாரத்தையும் பறிக்கப் போகிறீர்களா..?
ஆப்பிள் நிறுவனத்தை கூட அசால்டாக அள்ளி ஓரங்கட்டிய சவுதி அராம்கோ நிறுவனத்தைப் பார்த்த பிறகும் பொதுத் துறை நிறுவனங்களை கூறு 30 ரூபாய் என பொட்டலம் போடப் போகிறீர்களா..?

சிரமம் தான்

சிரமம் தான்

இதெற்கெல்லாம் ‘ஆம்' என விடையளிப்பீர்கள் என்றால், பிடித்தம் போக, வாரம் 286 ரூபாய் கூலி வாங்கி கஞ்சி குடித்து அழகான இந்தியாவை அசிங்கப்படுத்தும் ஆண்டி இந்தியர்களைப் பற்றியோ... PF, ESI, Professional Tax போன்ற இத்தியாதிகள் எல்லாம் போக மாதம் 18,463 ரூபாய் 25 பைசா வாங்கி ஓட்டை ஒடிசல் நிறைந்த 552 சதுர அடி வீட்டில் 6 பேர் குடியிருக்கும் தேசத் துரோகிகளைப் பற்றியோ... கவலைப்படவில்லை என்பதை சோடா குடித்து ஜீரணிக்க வேண்டி இருக்கிறது.

பேனாவை மாற்றுங்கள்

பேனாவை மாற்றுங்கள்

இப்படி அந்நிய நேரடி முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு திருத்தப்படும் தொழிலாளர் நலச் சட்டங்கள் மேலே சொன்ன கூலித் தொழிலாளிக்கும், மாதச் சம்பளம் வாங்கும் ஊழியனுக்கும் என்ன சாதகத்தைக் கொடுத்துவிடும்..? JRD TATA-வினால் முன்னெடுக்கப்பட்டு, கொண்டு வரப்பட்ட இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி எழுதும் உங்கள் பேனா... தொழிலாளர்களிடம் இருந்து வாங்கிய ஒத்த ரூபா பேனவாக இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ, இந்தியாவுக்கு முதலீட்டுப் படி அளக்கும் பரமனான முதலீட்டாளர்களிடம் இருந்து, பரிசாக வாங்கிய Fulgor Nocturnus (விலை ரூ.56 கோடி) பேனாவால் எழுதத் தொடங்கி இருக்கிறீர்கள். நீங்களே தொழிலாளர்களுக்கு சாதகம் செய்ய நினைத்தாலும், அந்த பேனா... 56 கோடி விலை கொண்ட அந்த வைரப் பேனா விடாது.

நம்பிக்கை

நம்பிக்கை

மதிப்பிற்குரிய மோடிஜி, இந்தியர்கள் கடந்த பல தசாப்தங்களில் எந்த அரசியல் கட்சிக்கும் கொடுக்காத பெரிய ஆதரவை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஏதோ ஒரு விஷயத்தில் நீங்கள் நல்லதை செய்வீர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் 100-க்கு 6 பேர் தான் வருமான வரி செலுத்துகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் கூலித் தொழிலாளர்கள் தான். இந்த அறு பேரைப் பற்றி அதிகம் கவலைப் பட வேண்டாம். ஆனால் அந்த 94 பேருக்கு உங்கள் அரசு வகுக்கும் புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் தேவை. அப்படி ஒரு சட்டம் இருப்பதைக் கூட அரியாத அந்த 94 இந்தியர்களுக்கு, உங்கள் புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் வலு சேர்ப்பதாக இருக்க வேண்டும்.
சேர்க்கும் என நம்புகிறோம்.
சேர்ப்பீர்கள் என நம்புகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: modi மோடி
English summary

all state government is below central government due to new land reform new labor reform new privatization reform

all state government is below central government due to new land reform new labor reform new privatization reform
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X