தண்ணீர் பிரச்சினையில் மூடப்படும் ஹோட்டல்கள்... தள்ளுவண்டி கூழ் பசியாறும் மக்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வந்தாலும் தலைநகரில் அது ருத்ரதாண்டவம் ஆடிவருவது போலத்தான் உள்ளது. 2015ல் தண்ணீர் தேசமாக இருந்த சென்னை இப்போது வறட்சி தேசமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குடிதண்ணீர் பிரச்சனையின் காரணமாக சென்னையில் சாதாரண கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை அனைத்தும் தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது காலத்தின் கொடுமைதான்.

சிறு ரெஸ்டாரெண்ட்டுகள் முதல் கையேந்தி பவன்கள் வரை தற்காலிகமாக மூடப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் இதையே நம்பி, வெளியூர்களில் இருந்து வந்த மேன்சன்களில் தங்கி வேலை பார்க்கும் மாதச் சம்பளதாரர்களின் நிலை கேள்விக்குறியாக ஆகிவிட்டது.

தண்ணீர் பிரச்சனையால் ஹோட்டல்கள் மூடப்படுவதால், அங்கு சாப்பிட்டு வந்தவர்கள், வேற வழியில்லாமல் தள்ளு வண்டிகளில் விற்கப்பட்டு வரும் கம்மங்கூழ், கேப்பை கூழ் என எளிய உணவுப்பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். பிரியாணியும் பிரைடு ரைஸ், நூடுல்ஸ் சாப்பிட்டவர்கள் கூட இப்போது தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் கம்மங்கூழ், கேப்பைக்கூழ் குடித்து பசியாறுவதால் ஆரோக்கியம் அதிகரித்து வருகிறது.

ஏரிகளின் மாவட்டம் எங்கே

ஏரிகளின் மாவட்டம் எங்கே

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சென்னையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் பச்சை பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். காரணம் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை சுற்றியுள்ள ஏரிகள் அனைத்துமே ஆண்டுக்கு குறைந்த பட்சம் 9 மாதங்களாவது நீரால் நிரம்பி வழியும். இதன் காரணமாகவே செங்கல்பட்டு மாவட்டத்தை ஏரிகளின் மாவட்டம் என்று சொல்லப்பட்ட வரலாறு உண்டு.

குடிநீர் ஏரிகள்

குடிநீர் ஏரிகள்

இந்த மூன்று மாவட்டங்களில் அன்றைக்கு இருந்த ஆயிரக்கணக்கான ஏரிகள் எல்லாம் இன்றைக்கு சிபிஐ வைத்து தேடினாலும் கிடைக்காத அளவிற்கு காணாமல் போய்விட்டன. அவை எல்லாமே நாம் உருவாக்கியவை அல்ல என்பதும், நம்முடைய மூதாதையர்களான பல்லவ மன்னர்கள் காலத்தில் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கு என்றே உருவாக்கப்பட்டவை அவை என்பது இப்போதிருக்கும் பொதுஜனத்திற்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

தகவல் தொழில்நுட்ப அசுரன்

தகவல் தொழில்நுட்ப அசுரன்

என்றைக்கு தகவல் தொழில்நுட்பம் என்ற அசுரம் சென்னையில் காலடி எடுத்து வைத்தானோ அன்றிலிருந்தே சென்னைக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் போதாத காலம் ஆரம்பமாகிவிட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நம்மால் தான் ஒன்றை உருவாக்கத் தெரியாது. குறைந்தபட்சம் நம் மூதாதையர்கள் உருவாக்கி வைத்ததையாவது பாதுகாக்கலாமே என்ற குறைந்தபட்ச அறிவு கூட நம்முடைய மூளைக்கு எட்டாமல் போனதுதான் வேதனை. அதன் பலனைத் தான் இன்றைக்கு சென்னையில் குடியிருக்கும் நாம் நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 கான்கிரீட் காடுகள்

கான்கிரீட் காடுகள்

பெருநகரமயமாக்கல் என்ற பெயரில் இருக்கும் ஏரிகளை எல்லாம் அழித்தும் ஏரிகளுக்கு நீர் வரும் வழித்தடங்களையும் அழித்து சுடுகாடாக்கி, அதன் மேல் கான்கிரீட் காடுகளை உருவாக்கி அதில் நாம் சுகமாக இருப்பதாக ஆரம்பத்தில் நினைத்திருந்தோம். அதாவது சுடுநீரில் நீந்திக் குதியாட்டம் போடும் ஆமையைப் போல். நீரின் சூடு ஏற ஏற அது பின்னர் கைகால்களை விறைத்து தன் மூச்சை நிறுத்திவிடும் அது போலத்தான் தற்போது சென்னையில் குடியிருக்கும் நம்முடைய நிலைமையும்.

வெறும் காத்துதான் வருது

வெறும் காத்துதான் வருது

இன்றைக்கு 500 அடி 1000 அடிகள் வரையிலும் ஆழ்துளை கிணறுகளை அமைத்தாலும் தண்ணீர் வரவில்லையே என்று நாம் அலுத்துக்கொள்கிறோம். அத்தியாவசிய பிரச்சனைகளான காலைக் கடன் முதல் துணி துவைப்பது, குளிப்பது, சமைப்பது என அனைத்துக்கும் தண்ணீர் தண்ணீர் என்று அலையாய் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்.

எல்லாமே மிச்சம்தான்

எல்லாமே மிச்சம்தான்

தண்ணீர் பற்றாக்குறையால் பெரும்பாலான தகவல் தொழில்நுட்பத்துறை அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கச் சொல்லிவிட்டன. இதனால் அவைகளுக்கு தண்ணீர் செலவு மிச்சம், மின்சார செலவு மிச்சம், டீ காஃபி செலவு மிச்சம். சென்னையின் உட்புறத்தில் உள்ள சில அலுவலகங்கள் கூட சனிக்கிழமையன்று விடுமுறையை அறிவித்துள்ளது ஆச்சர்ய அதிர்ச்சியாகும்.

மத்தியான சாப்பாடு கட்

மத்தியான சாப்பாடு கட்

தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருமாறியதை அடுத்து, சென்னையின் சாதாரண கையேந்தி பவன் உள்பட சிறிய ரெஸ்டாரெண்ட்டுகள் முதல் பெரிய அளவிலான ஸ்டார் ஹோட்டல்கள் வரை அனைத்துமே மதிய உணவான அரிசி சாப்பாட்டை நிறுத்திவிட்டது. அதற்கு முக்கியமாக சாம்பாருக்கும், ரசம் மற்றும் மோர் குழம்பு என அனைத்திற்கும் தண்ணீர் அவசியமாகிறது. இதன்காரணமாகவே சாப்பாட்டை நிறுத்திவிட்டு சில ஹோட்டல்களில் கலவை சாதமாக விற்பனை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

மூடப்படும் உணவகங்கள்

மூடப்படும் உணவகங்கள்

இன்னும் சில பெரிய அளவிலான ரெஸ்டாரெண்ட்டுகள் தண்ணீர் பிரச்சனை தீரும் வரையிலும் ரெஸ்டாரெண்ட்களை மூடிவிட்டு மூட்டையை கட்டிக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் எண்ணத்தில் உள்ளனர். இதனால் இவற்றை நம்பி வெளியூர்களில் இருந்து வந்து மேன்சன்களில் தங்கி சாப்பிட்டு வந்த மாதச் சம்பளதாரர்கள் முதல் சாதாரண கூலி வேலை செய்பவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.

 

 

கைவிட்ட மழை

கைவிட்ட மழை

இது குறித்து தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் செயலாளரான ஆர். ஸ்ரீநிவாசன், இது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ள மிகப்பெரும் பிரச்சனையாகும். கூடவே காய்கறிகளின் விலையிம் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு மழையும் நம்மை கைவிட்டுவிட்டது. இதன் காரணமாகவே சென்னையில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் கடும் சிக்கலை சந்திக்க நேர்ந்துள்ளது, என்றார்.

 

 

விலை ஏறிய வாழை இலை

விலை ஏறிய வாழை இலை

தண்ணீர் பிரச்சனையால் சாப்பாடு செலவும் அதிகரித்துள்ளது. முன்பு வாழை இலையில் சாப்பாடு பரிமாறினோம். ஆனால் வாழை இலையும் விலை ஏறிவிட்டது. கூடவே தண்ணீர் பிரச்சனை வேறு. இதனாலேயே கூட்டு பொறியல்களை பேப்பர் கப்களில் வைத்து பரிமாறுகிறோம் என்றும் ஹோட்டல்களில் தண்ணீர் சிக்கனத்தை கடைபிடிக்க பாத்திரங்களை கழுவுவதற்காக டிஷ்வாசர் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் அதற்கும் அதிக தண்ணீர் தேவைப்படுவதோடு, சுத்தம் என்பது கேள்விக்குறிதான் என்றும் ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

பிளாஷ்டிக் கட்டுப்பாடு

பிளாஷ்டிக் கட்டுப்பாடு

தற்போது பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழ்நாடு அரசு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளதால் அதுவும் தற்போது பிரச்சனையாகி உள்ளது. சாப்பாட்டு பொட்டலத்தை பாலிதீன் பேப்பர்களில் கட்டித்தந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், அந்தப் பக்கமும் எங்களுக்கு வழிகள் மூடப்பட்டுவிட்டன என்று ஸ்ரீநிவாசன் விரக்தியோடு கூறினார்.

ஒரு லோடு தண்ணீர் ரூ.5000

ஒரு லோடு தண்ணீர் ரூ.5000

சாதாரணமாக சிறிய அளவிலான ஹோட்டல்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதனை ரூ.2500 கொடுத்து வாங்கி வந்தனர். தற்போது இதையே ரூ.5000 கொடுத்து வாங்கவேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஆனாலும், அதற்கும் உத்தரவாதம் கிடையாது. இன்றைக்கு சொன்னால் நாளைக்குத்தான் வரும் அல்லது வராது என்று ஸ்ரீநிவாசன் ஆதங்கப்பட்டார்.

கம்மங்கூழ் விற்பனை ஜோர்

கம்மங்கூழ் விற்பனை ஜோர்

தண்ணீர் பிரச்சனையால் ஹோட்டல்கள் மூடப்படுவதால், அங்கு சாப்பிட்டு வந்தவர்கள், வேற வழியில்லாமல் தள்ளு வண்டிகளில் விற்கப்பட்டு வரும் கம்மங்கூழ், கேப்பை கூழ் என எளிய உணவை சாப்பிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவை எல்லாமே உடம்புக்கு ஆரோக்கியமான உணவு என்பது சாதாரண பாமர மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால், வேளைக்கு ஒரு உணவு என்று சாப்பிட்டு வந்த மேல்தட்டு மக்களுக்கு இதன் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+