பட்ஜெட் 2019: பொருளாதார வளர்ச்சியை எட்ட உங்க சப்போர்ட் தேவை - நிர்மலா சீதாராமன்

உங்க சப்போர்ட் எங்களுக்கு வேணும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், பிரதிநிதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவை எட்ட வேண்டுமானால் உங்களின் ஒத்துழைப்பு மத்திய அரசுக்கு அவசியம் தேவை என்று 35ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். பட்ஜெட் தயாரிப்பிற்காக அல்வா கிண்டும் பணி முடிவடைந்து அனைவரும் நார்த் பிளாக்கில் உள்ள அறைக்கு போய் விட்டனர். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் மத்திய தர வர்க்கத்து மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்குமா பாக்கெட்டை நிரப்புமா பார்க்கலாம்.

நிதியமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன், மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ தனியாக எந்தவொரு முடிவையும் செயல்படுத்த முடியாது. எனவே இருவரும் சேர்ந்து எந்த முடிவையும் எடுத்தால் தான் நாம் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியும் என்று வலியுறத்தினார்.

ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், ஜிஎஸ்டி இறுதி ஆண்டு ரிட்டன் படிவத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நடப்பு ஜூன் 30ஆம் தேதியில் இருந்து வரும் ஆகஸ்டு 31ஆம் தேதிக்கு நீட்டித்தார். அதோடு ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டனுக்கான ஒரே படிவம் வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


அல்வா கிண்டிட்டார்

அல்வா கிண்டிட்டார்

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியின் அமைச்சரவையில் முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான நிர்மலா சீதாராமன், பதவியில் அமர்ந்த உடனேயே சுறுசுறுப்பாக வேலையை தொடங்கிவிட்டார். வரும் ஜூலை 5ஆம் தேதியன்று தாக்கல் செய்யவிருக்கும் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தயாரிக்கும் வேலையை அல்வா கிண்டி ஆரம்பித்து வைத்து விட்டார்.

பொதுமக்கள் ஆலோசனை

பொதுமக்கள் ஆலோசனை

முன்னதாக பொதுமக்கள், பெரு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஊடகங்கள், வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு அறிவித்திருந்தார். அவர்களும் வரிச் சலுகை, வருமான வரி தாக்கலுக்கான உச்சவரம்பு மற்றும் வங்கிகளின் மறுசீரமைப்புக்கான உரிய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியும், மத்திய அரசின் இணையதளத்திலும் தெரிவித்திருந்தனர்.

உச்சவரம்பு உயர்த்தக்கூடாது

உச்சவரம்பு உயர்த்தக்கூடாது

இரண்டாவது கட்டமாக நாட்டின் பொருளாதார நிபுணர்களையும், வரி நிபுணர்களையும் சந்தித்து 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வரிச்சீர்திருத்தம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை கேட்டறிந்துகொண்டார். வரி ஆலோசகர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக வருமான வரி உச்சவரம்பை உயர்த்தக்கூடாது என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. வருமான வரி உச்சவரம்பை உயர்த்தினால் வரி வருவாய் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

உங்களின் பங்களிப்பு அவசியம்

உங்களின் பங்களிப்பு அவசியம்

அடுத்ததாக கடந்த வாரம் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டத்தையும் நடத்தினார். அதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ராஜஸ்தான் உள்பட பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதில் தற்போது அமைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் எடுக்கப்படும் அனைத்து கொள்கை முடிவுகளில் மாநில அரசுகளுக்கும் முக்கிய பங்களிப்பு உண்டு என்பதையும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். கூடவே நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

35ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

35ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

தற்போது பிரதி மாதமும் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த மாதம் லோக்சபா தேர்தல் காரணமாக 35ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. புதிய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இக்கூட்டத்தில் இதில் பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

பதவி நீட்டிப்பு

பதவி நீட்டிப்பு

நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஜிஎஸ்டி வரிசூலில் முறைகேடு செய்து கொள்ளை லாபம் ஈட்டுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் பயன்படுத்தலாம்

ஜனவரி முதல் பயன்படுத்தலாம்

மேலும், கடந்த ஆண்டுக்கான மாதந்திர ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்தவர்களின் ஆண்டு இறுதி ஜிஎஸ்டி ரிட்டன் படிவங்களான ஜிஎஸ்டிஆர்-9, ஜிஎஸ்டிஆர்-9ஏ மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி ஆகியவற்றை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நடப்பு ஜூன் மாதம் 30ஆம் தேதிக்கு பதிலாக வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து வர்த்தக விவரங்களையும் உள்ளடக்கிய ஜிஎஸ்டி இணைப்பு-1, இணைப்பு-2, ஜிஎஸ்டி ரிட்-01 மற்றும் ஜிஎஸ்டி பிஎஎம்டி-08 ஆகியவற்றோடு கூடிய புதிய மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் படிவத்தை வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பயன்படுத்திக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இ-இன்வாய்ஸ் கட்டாயம்

இ-இன்வாய்ஸ் கட்டாயம்

அதேபோல். பெரு நிறுவனங்கள் அனைத்துமே தங்களின் மாதாந்திர விற்பனை விவரத்தை புதிய மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் படிவங்கள் மூலம் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து விற்பனைக்கான பில்களையும் ஜிஎஸ்டி இணையதளத்தில் இ-பில் எனப்படும் இ-இன்வாய் மூலமாகவே தயார் செய்து சரக்குகளோடு அனுப்பவேண்டியது கட்டாயம் என்றும் அறிவித்துள்ளது. அதோடு ஜிஎஸ்டி பயனை நுகர்வோருக்கு அளிக்காத வர்த்தக நிறுவனங்களுக்கு 10 சதவிகிதம் அபராதம் விதிப்பதற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வரி வருவாய் அதிகரிப்பு

வரி வருவாய் அதிகரிப்பு

இறுதியில் பேசிய நிர்மலா சீதாராமன், மத்திய அரசுக்கு வரும் வரி வருவாயில் மாநிலங்களின் பங்களிப்பானது கடந்த 2015ஆம் ஆண்டில் 32 சதவிகிதமாக இருந்து தற்போது 42 சதவிகிமாக அதிகரித்துள்ளது. இதே போல், பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் கொள்கை முடிவுகளுக்கும் அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாநிலங்களின் சார்பாக பங்கேற்ற முதல்வர்களும் நிதியமைச்சர்களும் மத்திய அரசு எடுக்கும் பொருளாதார மற்றும் கொள்கை முடிவுகளுக்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு வழங்குவதோடு உறுதுணையாக துணை நிற்கும் என்றும் கோரசாக தெரிவித்தனர்.

10 நாட்கள் பட்ஜெட் சிறை

10 நாட்கள் பட்ஜெட் சிறை

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்த பின்னர் நேற்று அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெற்றது. நிதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தயார் செய்யப்பட்ட அல்வாவை நிர்மலா சீதாராமன் வழங்கினார். அதை சாப்பிட்டு முடித்த பிறகு, பட்ஜெட் தயாரிபு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நார்த் பிளாக்கில் உள்ள பேஸ்மென்ட் அறைக்குப் போய்விடுவார்கள். 10 நாள்கள் அனைவரும் அங்கேயேதான் தங்கியிருப்பார்கள். பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியே கசிந்து விடக் கூடாது என்பதற்காகதான் இந்த ஏற்பாடு. அங்குதான் பட்ஜெட் அச்சிடும் பணி நடைபெறும். பட்ஜெட் பாக்கெட் நிரப்புமா, பதம் பார்க்குமா? நிர்மலா சீதாராமன் என்ன செய்யப்போகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+