டெல்லி : மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், ஏற்கனவே சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய இடியை கொடுத்துள்ளது. ஆமாங்க.. ஜூன் மாத சம்பளம் கொடுக்க காசில்லை என்று கூறியுள்ளதாம்.
அதோடு பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஜூன் மாதம் சம்பளமாக கொடுக்க வேண்டிய தொகையான ரூ.850 கோடி சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் இதற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும், இதனால் அரசிடம் அவசர நிதியுதவி கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான இது, கிட்டதட்ட 13,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதோடு இந்த கடன் பிரச்சனையால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதும், தொடர்ந்து நிறுவனத்தை நடத்துவதும் மிக கடினமாக உள்ளது என்றும் கூறியுள்ளதாம்.
செலவுக்கு காசு வேணும்?
ஒரு புறம் மாதாந்திர வருமானம் வரும் வரையில், இடையில் நடைபெறும் செயல் பாட்டுக்கான காசு இல்லை என்றும், இதனால் முற்றிலும் செயல்பாடுகள் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. அதோடு பி.எஸ்.என்.எல்க்கு போதிய நிதியளிக்காவிட்டால், இந்த தொலைத் தொடர்பு நிறுவனத்தை தொடருவது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
தலைவிதியை கொஞ்சம் மாற்றுங்கள்?
கடந்த வாரம் இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம், அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல்லின் தலைவிதியை கொஞ்சம் மாற்றி எழுதுமாறும், இதற்கான தக்க நடவடிக்கையை எடுக்குமாறும் அரசிடம் கோரியுள்ளதாம் பி.எஸ்.என்.எல். அதோடு அதிகளவு கடனில் சிக்கியுள்ள பி.எஸ்.என்.எல் தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், தொலைத் தொடர்பு சேவையை தொடர்ந்து கொடுப்பதிலும் சிக்கல் நீடித்து வருவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாம்.
பிப்ரவரியிலும் சம்பளம் கொடுக்க முடியவில்லை?
பி.எஸ்.என்.எல் வரலாற்றிலேயே கடந்த பிப்ரவரி மாத்தில் தான் இப்படியொரு பிரச்சனையை சந்தித்தது. அதிலும் 1.76 லட்சம் ஊழியர்களுக்கு முதல் முறையாக சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வந்தது. இதுவே நாங்கள் செய்த முதல் தவறு. போகிற போக்கை பார்த்தால் ஜீன் மாத சம்பளம் கொடுக்க முடியுமா என்றும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.
தனியார் நிறுவனங்களின் விலை யுத்தம்?
ஒரு புறம் தனியார் நிறுவனங்களின் மலிவான விலை குறைந்த பேக்குகளால் பி.எஸ்.என்.எல் மிகுந்த நஷ்டத்தை கண்டது. இதனால் அரசுக்கு சொந்தமான இந்த தொலைத் தொடர்பு நிறுவனம் மிக அதிகமான பொருளாதார நெருக்கடிக்கும் ஆளானது. இது குறித்து கோடாக் இன்ஸ்டியூஸ்னல் ஈக்விட்டீஸின் அறிக்கையின் படி, கடந்த டிசம்பர் 2018லியே பி.எஸ்.என்.எல் செயல்பாட்டு நஷ்டமாக ரூ.90,000 கோடிக்கு மேல் இருந்ததாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளக்கம் கொடுத்த பி.எஸ்.என்.எல்?
பி.எஸ்.என்.எல் இது குறித்து பல முறை அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என்றும், கடந்த மாதம் இது குறித்து விளக்கப்படம் ஒன்றை மோடிக்கு அனுப்பி வைத்ததாகவும் பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது. ஒரு புறம் பணக்கார அம்பானியின் ஜியோவால் இலவசமாக கொடுக்கப்பட்ட வாய்ஸ் கால்கள், மிக மிகக் குறைந்த மலிவான பேக்குகள், மற்ற நிறுவனங்களை சீர்குலைக்கும் மலிவான பேக்குகள் என அனைத்தும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கடனுக்கும், நஷ்டத்திற்கும் வழிவகுத்ததாகவும் கூறியுள்ளது இந்த அரசு நிறுவனம்.


Click it and Unblock the Notifications