சென்னை: கள்ளநோட்டுகள் புழக்கத்தில் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
"அந்த நாள் - இந்தியர்களின் வாழ்வில் மறக்க முடியாத நாள்" எல்லா நாட்களையும் போல அழகாகத்தான் விடிந்தது அந்த 2016-ம் ஆண்டின் நவம்பர் 8-ம் தேதியும். அன்றைய பகல் பொழுதில் ஓடியாடி வேலை செய்த சாமானியர்கள் முதல் பொழுதை போக்கியே கழித்த மேல்தட்டு வர்க்கம் வரை இரவு தூக்கத்திற்கு தயாராகிக் கொண்டிருக்க திடீரென்று தொலைக்காட்சி மூலம் காட்சி தந்த இந்திய பிரதமர் மோடி இன்று நள்ளிரவு முதல் உயர் மதிப்பு கொண்ட இந்திய பணமான ரூ.500, மற்றும் ரூ.1000 ஆகியவை செல்லாது என்றார்.
வங்கியில் இருக்கும் உங்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடு உண்டு என்றார். இதன் மூலம் நாட்டில் கருப்பு பணமும், கள்ளப் பணமும் ஒழிந்து விடும் என்றார். மறுநாள் திருமணம் போன்ற நிகழ்வுகளை வைத்திருந்தவர்கள் திகைத்து நின்றார்கள்.
அறிவு ஜீவிகள் கூட நம்பினர்
வங்கியில் தங்களது பணத்தை எடுக்க வரிசையில் கால் கடுக்க நின்றதில் பல முதியவர்கள் , நோயுற்றவர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள். எல்லையில் ராணுவம் அவ்வளவு துன்பத்தை தாங்கி நிற்கும்போது உங்களால் இந்த சிறு துன்பத்தை தாங்க முடியாதா என்று பாஜகவினர் கேலி கேள்விகளை எழுப்பினர். இருந்தாலும் கள்ளப்பணமும் ஒழிந்து, கறுப்புப் பணமும் ஒழிந்து நல்ல நாடாக இந்தியா மலர்ந்து விடும் என்று அறிவு ஜீவிகள் கூட நம்பினர்.
ரூ.2,000 நோட்டுகள் சிக்கியது
இன்னும் ஒருபடி மேலே சென்ற ஒரு நடிகர் புதிதாக அச்சடிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டில் சிப் உள்ளது. ஆகவே அந்த நோட்டை எங்கும் பதுக்கி வைக்க முடியாது. உடனடியாக கண்டுபிடித்து விடலாம் என்றெல்லாம் அளந்து விட்டு 'அல்வா' கொடுத்தார். சாமானியர்கள் தங்களது பணத்தை வங்கியில் இருந்து எடுக்க கால் கடுக்க நின்று நாள் ஒன்றுக்கு ரூ.4000/- த்தை எடுத்து வந்த அதே சமயத்தில்தான் தமிழகத்தில் சில ரெய்டுகளில் பல கோடிகள் அளவில் 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது.
மூன்றாவது இடத்தில் தமிழகம்
இப்படியாக சாமானியர்களுக்கு மிஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான். இறுதியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கள்ளப் பணத்தை முழுமையாக ஒழிக்கவில்லை என்றாலும் கள்ள நோட்டுகளை ஒழிக்க இப்போது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் மூன்று ஆண்டுகள் ஆகப் போகும் நிலையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கள்ள நோட்டுகள்
கள்ள நோட்டுகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இந்தியா முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டதில் உத்தரகாண்ட் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு கடந்த மாதம் 18 ம் தேதி வரை 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மூலம் ரூ.65.7 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கள்ள நோட்டு புழக்கம் குறைந்தது
2019 ஜூன் 18ஆம் தேதி வரையில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ள மொத்த கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ.5.05 கோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தாண்டி கள்ள நோட்டுகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்வதால் கள்ள நோட்டு புழக்கம் கடந்த ஆண்டுகளை விட குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக கைப்பற்றப்படும் கள்ள நோட்டுகள் ஆர்.பி.ஐ மற்றும் கருவூலங்களால் அழிக்கப்பட்டு விடுகிறது.


Click it and Unblock the Notifications