சென்னை: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் தலைமைப் பொறுப்பில் தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் அமர வைக்கப்பட்டுள்ளார்.
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் திருநங்கைகள் இப்போது பல்வேறு துறைகளில் முத்திரைப் பதிக்க தொடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் திருநங்கைகள் என்றாலே கேலியும் கிண்டலும் என்றிருந்த நிலை மாறி அவர்கள் தங்களாலும் சமூகத்தில் பெரிய அளவில் பங்களிப்பை செய்ய முடியும் என்று சாதித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நம்மூரை சேர்ந்த திருநங்கை ஒருவர் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார். தமிழகத்தின் பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன், திருநங்கையான இவர் 10 ஆண்டுகள் அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
ஸ்விகி மேலாளர்
தொழில்நுட்ப வல்லுநரான சம்யுக்தா விஜயன், Toutestudio என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் திருநங்கைகளின் ஃபேஷன்டிசைன், மேக்-அப் மற்றும் ஹேர்ஸ்டைலிங் போன்ற திறமைகளை ஊக்குவித்துக்கொண்டிருந்தார். 2017-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்த இவருக்கு ஸ்விக்கி நிறுவனம் முதன்மைத் தொழில்நுட்ப திட்ட மேலாளர் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது.
நிறுவனத்தை வளர்ப்பார்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்விகி நிறுவனம் சம்யுக்தா விஜயன், 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியிருப்பதால், ஸ்விகி நிறுவனத்தை வளர்த்தெடுப்பதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்' என்றும் எல்.ஜி.பி.டி சமூக மக்களுக்கு உதவும் வகையில் இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவும் ஸ்விகி தெரிவித்துள்ளது.
சம்யுக்தா விளக்கம்
ஸ்விகி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தது குறித்து பேசிய சம்யுக்தா "என் திறமையை மதித்து, ஸ்விகி நிறுவனம் கெளரவமான பதவியை எனக்கு வழங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ஒரு அங்கமாக இருந்து இந்த நிறுவனத்தில் பணியாற்றுவேன், இந்திய கார்ப்ரேட் நிறுவனங்கள் தற்போது திருநங்கைளுக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் திருநங்கைகளுக்கான ஆதரவு குழுக்களையும் நிறுவனத்தில் கட்டமைக்க வேண்டும்.
எனக்கு சவால்கள் இருந்தது
பல திருநங்கைகள் சரியான கல்வித் தகுதிகளுடன் இருப்பதில்லை. எனக்கு குடும்பத்தின் ஆதரவு இருந்தால் கல்வி, பிற கூடுதல் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்த முடிந்தது. தற்போது பொருளாதார ரீதியாக யாருடைய ஆதரவும் இல்லாமல் நான் உள்ளேன். அதனால் பிற திருநங்கைகளுடன் ஒப்பிடும் போது எனக்குச் சவால்கள் வேறு விதமாக இருந்தது. திருநங்கையை அனைத்து துறைகளிலும் பணியாற்றுவதற்கான ஆற்றல் உள்ளது. ஆனால் தேவையான தகுதிகளில் தான் சிக்கல் உள்ளது.
வேலையில்லாமல் கஷ்டம்
எனவே இன்டர்ன்ஷிப் அல்லது பிற பயிற்சிகள் மூலம் சரியான அறிவை அளிக்கும் போது திருநங்கைகள் வேலைவாய்ப்பை எளிதாகப் பெறுவார்கள்" என்று கூறிய அவர் என்னைப் போலவே படிப்பில் தேர்ந்த பல திருநங்கைகள் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் இருக்கிறார்கள். மேலும், படிப்பறிவற்ற திருநங்கைகளும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸ்விகி நிறுவனத்தில் என்னுடைய குழு, நிச்சயமாகத் திறமை வாய்ந்த திருநங்கைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications