டெல்லி : மத்திய அரசு பல்வேறு அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், தற்போது அதற்குண்டான நடவடிக்கையிலும் தீவிரமாக இறங்கியுள்ளதை காண முடிகிறது. குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனத்தில் எந்த புதிய பணி நியமனமோ அல்லது ஊதிய உயர்வோ கூடாது என்றும் கூறியிருக்கிறதாம்.
ஆமாங்க.. அப்படின்னா? தனியார்மயமாக்கல் உறுதியா என்று கேட்டால், ஆமாம் ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு, அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதால், இந்த முறை புதிய பணி நியமனம் மற்றும் ஊதிய உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெருத்த கடன் பிரச்சனையில் இருப்பதை அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இந்த நிறுவனத்திற்கு 58,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
தாரை வார்ப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கடன் அடைப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, இருக்கும் கடன்களை அடைக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது புதிதாக எந்த பணி நியமனமும் கூடாது என்றும், அதோடு ஊதிய உயர்வும் கிடையாது என்றும் கூறியுள்ளதாம்.
மொத்த கடன் எவ்வளவு?
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மொத்த கடன் 58,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எனினும் மொத்த இழப்பு 70,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் 2019வுடன் முடிவடைந்த நிதியாண்டில் மட்டும் கடன் 7,600 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவை காப்பாற்ற தனியார்மயமாக்க வேண்டும்?
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஏர் இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் தனியார்மாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாராம். மேலும் ஒரு அதிகாரத்துவ செயல்முறையை பின்பற்றுவதை விட அல்லது டெண்டர் முறைக்கு செல்வதை விட, நாளுக்கு நாள் செயல்பாட்டு முடிவுகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய ஒரு விமானத்தை இயக்க அரசாங்கம் தேவை இல்லை என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
அமித்ஷா தலைமையில் முடிவு?
அடுத்து வரும் சில வாராங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு, ஏர் இந்தியா தனியார்மயமாக்கல் குறித்த முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த 2018ம் ஆண்டிலேயே ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க முடிவெடுத்த போது, அது செயல்படுத்தப்பட முடியாமலேயே போய்விட்டது. இதனால் தனியார்மயாக்களில் கொள்கைகள் இந்த முறை இன்னும் மேலும் தளர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications