டெல்லி: உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் (World Economic Outlook Report) IMF அமைப்பு இந்தியாவின் பொருளாதார ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை, முந்தைய கணிப்புகளை விட குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.
IMF என்றழைக்கப்படும் பன்னாட்டு நிதியம் இந்தியாவுக்கான ஜிடிபி பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை மீண்டும் குறைத்திருக்கிறது. 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகிதம் அளவுக்கு தான் வளரும் எனச் சொல்லி இருக்கிறது. அதோடு 2020 - 2021 நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாகத் தான் இருக்கும் எனவும் மறு கணிப்பு செய்திருக்கிறது.

இதற்கு முன், ஏப்ரல் 2019-ல், இதே IMF அமைப்பு, இதே 2019 - 20 நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் எனவும், 2020 - 21 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாகவும் இருக்கும் எனச் சொல்லி இருந்தது. இப்போது தன் ஏப்ரல் கணிப்பை விட 2019 - 20 மற்றும் 2020 - 21 நிதி ஆண்டுக்கு 0.3 சதவிகிதம் குறைத்துச் சொல்லி இருக்கிறது IMF.
இந்தியாவில் குறைந்து வரும் உள்நாட்டுத் தேவை, சரியும் நுகர்வுகள், சரிந்து வரும் முதலீட்டுத் தேவைகள் பல்வேறு இந்திய தொழில் துறைகள் எதிர் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் மந்த நிலை, குறிப்பாக சரிந்து வரும் இந்திய ஆட்டோமொபைல் விற்பனை போன்றவைகள், இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணமாகச் சொல்கிறது.
"இனி வரும் காலங்களில், இந்தியாவின் நிதிக் கொள்கைகளில், மேலும் வட்டி விகிதங்களைக் குறைத்து, இந்திய அரசாங்கத்தின் நிதி நிலைகளை மேம்படுத்தி, இந்திய பொருளாதாரத்தில் இருக்கும் ரிஸ்குகளைக் குறைப்பார்கள்" என அரசின் நடவடிக்கைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது IMF.
கடந்த மார்ச் 2019 காலாண்டில், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி சுமார் 5.8 சதவிகிதமாக சரிந்தது. அதற்கு முந்தைய டிசம்பர் 2018-ல் 6.6 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் மார்ச் 2019 காலாண்டில் சரிந்திருக்கிறது. ஆண்டு கணக்கில் 2018 - 19 நிதி ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார ஜிடிபி 6.8 சதவிகிதமாக இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய 2017 - 18 நிதி ஆண்டில் ஜிடிபி 7.2 சதவிகிதமாக இருந்தது கவனிக்க வேண்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications