சைபராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன், எப்போதும் தன் ரசிகர்களை, சாலை விதிகளை மதிக்கச் சொல்பவராம். ஆனால் இப்போது அந்த பெரிய சினிமா நட்சத்திரமே ஒரு சாலை விதி மீறலில் பிரச்னையில் சிக்கி இருக்கிறார் என்பது தான் செய்தி.
சமீபத்தில் தான் அல்லு அர்ஜூன் சுமார் 7 கோடி ரூபாய் செலவழித்து, Falcon என்கிற ஒரு பெரிய சொகுசு கேரவன் வாகனத்தை வாங்கினார். TS 09 FG 6666 தான் அல்லு அர்ஜூன் வாங்கிய சொகுசு வேனிட்டி வேனின் எண். அதை மகிழ்ச்சியாக "ரசிகர்களால் தான் என்னால் இந்த வாகனத்தை வாங்க முடிந்தது, ரசிகர்களின் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி" என்கிற ரீதியில் ட்விட்டி இருந்தார்.

அதோடு Falcon சொகுசு கேரவனின் உட்புறத்தையும் மகிழ்ச்சியாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஒரு நடமாடும் சொகுசு வீடு போல இருந்தது. சொகுசு இருக்கைகள், சோபா, கழிவறை, குளியலறை, மேக்கப் செய்து கொள்ள வசதியாக டிரெஸ்ஸிங் டேபிள் என எல்லாம் பிரமாதம். தெலுங்கு தேச ட்விட்டரே அல்லு அர்ஜூனின் ஃபால்கனைப் பற்றி பேசிக் கொண்டே இருந்தார்கள்.
ஒரு பக்கம் டிவிட்டரில் சக நடிகர்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை எல்லோரும் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்க, கடந்த ஜூலை 16, 2019 அன்று முகம்மது அப்துல் ஆசாம் என்பவர், ஹைதராபாத்தில், ஹிமாயத் நகர் பகுதியில் அல்லு அர்ஜூனின் Falcon வாகனத்தைக் கண்டிருக்கிறார். உடனடியாக சில ஃபோட்டோக்களை எடுத்து சைபராபாத் காவலர்களுக்கு அனுப்பி கறுப்புக் கண்ணாடி இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
2012-ம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், வாகனங்களில் கறுப்பு கண்ணாடி பொருத்திக் கொள்ளத் தடை விதித்தது. அப்படியே இருந்தாலும் கண்ணாடிகளை மாற்றச் சொன்னது. முகம்மது ஆசம் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் வாகனம் யாருடையது என விசாரித்து விவரங்களை திரட்டி இருக்கிறார்கள்.
வாகனம் அல்லு அர்ஜூனுடையது எனத் தெரிய வந்த பின்னும், தங்கள் பணியில் இருந்து பின் வாங்காமல் 735 ரூபாய்க்கு அபராத செலான் எழுதி அல்லு அர்ஜூனுக்கு அனுப்பி இருக்கிறார்களாம். அல்லு அர்ஜூனின் இந்த ஃபால்கன் வேனிட்டி சொகுசு வேன் ஒரு கஸ்டமைஸ்டு வாகனமாம். சொல்லப் போனால் இது அல்லு அர்ஜூனின் கனவு கேரவன் வேன் என்றும் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications