மும்பை, இந்தியா: நேற்று மாலை, இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவடைந்த பிறகு, டெக் மஹிந்திராவின் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியாயின. நேற்றைய காலாண்டு முடிவுகள் அடிப்படையில் இன்று காலை நன்றாக வர்த்தகம் நடக்கும். இது ஒரு பொது விதி. ஆனால், இன்றைய வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா நிறுவன பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகமானது. டெக் மஹிந்திரா தன் ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான முதல் மூன்று மாதங்களுக்கான காலாண்டு முடிவுகளில் நிகர லாபம் 7 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டெக் மஹிந்திராவின் ஜூன் 2019-க்கான நிகர லாபம் 959.3 கோடி ரூபாய். இந்த ஜூன் 2019 காலாண்டில் மட்டும் சுமார் 475 மில்லியன் டாலர் மதிப்பிலான டீல்களை முடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். டெக் மஹிந்திராவின் வருமானம், கடந்த ஜூன் 2018 காலாண்டை விட, 4.55 சதவிகிதம் அதிகரித்து 8,653 கோடி ரூபாயாக இருக்கிறதாம். ஆனால் கடந்த மார்ச் 2019 காலாண்டு உடன் ஒப்பிட்டால் சுமார் 2.6 சதவிகிதம் வருவாய் குறைந்திருக்கிறதாம்.

டெக் மஹிந்திரா நிறுவனம் லாப வரம்பு 15.2 சதவிகிதமாக இருக்கிறதாம். ஆனால் சராசரியாக இந்திய மென்பொருள் நிறுவனங்களின் லாப வரம்பு 24 சதவிகிதமாக இருக்கிறதாம். இதைக் குறித்து விளக்கிய டெக் மஹிந்திராவின் முதன்மை நிதி அதிகாரி மனோஜ் பட், தங்கள் நிறுவனத்தின் லாப வரம்பில் ஒரு சதவிகிதம் குறைந்ததற்கு சம்பள உயர்வுகள் மற்றும் கம்யூனிகேஷன் பிசினஸில் ஏற்பட்ட பலவீனம் தான் காரணம் என்றும், மற்றொரு 0.5 சதவிகிதம் அமெரிக்க விசா கட்டணங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமடைந்ததும் தான் காரணம் எனச் சொல்லி இருக்கிறார்.
தற்போது, இரண்டு பெரிய டீல்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறார்களாம். கூடிய விரைவில் இந்த இரண்டு டீல்களையும் ஓகே செய்துவிடுவோம் எனவும் சொல்லி இருக்கிறார்களாம். இப்படி நல்ல விஷயமும், சந்தைக்கு நெகட்டிவ்வான சில விஷயங்களும் மாறி மாறி இருந்ததால் பங்குச் சந்தையில் டெக் மஹிந்திரா பங்குகளின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
டெக் மஹிந்திரா பங்குகளின் விலை இன்று காலை 632 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி அதிகபட்சமாக 633 ரூபாயைத் தான் தொட முடிந்தது. வர்த்தக நேர முடிவில், டெக் மஹிந்திரா பங்குகளின் விலை 625.30 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. டெக் மஹிந்திரா நிறுவன பங்குகளின் 52 வார குறைந்தபட்ச விலையே 607.15 ரூபாய் தான் என்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications