மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இன்று கடன்களுக்கான வட்டி விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்து 5.4 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு கொடுக்கப்படும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், எஸ்.பி.ஐ அதை உடனடியாக குறைத்துள்ளது.
இதனால் மற்ற வங்கிகளும் வீட்டுக் கடனும், வாகனம் உள்ளிட்ட முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.பி.ஐ வட்டியை குறைத்துள்ளது
இந்த நிலையில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ தனது கடன்களுக்கான வட்டிவிகிதத்தை 8.40 சதவிகிதத்தில் இருந்து, 8.25 சதவிகிதமாக குறைத்துள்ளது. மேலும் இந்த வட்டி குறைப்பு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. இது குறித்து எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை குறைத்துள்ளதால், நாங்கள் அதன் பயனை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்க விரும்புகிறோம். இதனால் தான் அடிப்படை வட்டி விகிதத்தை 15 புள்ளிகள் அளவுக்கு குறைத்துள்ளோம் என்றும் கூறியுள்ளது.
என்ன முறையில் வட்டி குறைப்பு!
இதன் மூலம் அனைத்து வகையான கடன்களுக்கும் இந்த குறைந்தபட்ச வட்டி விகிதம் பொருந்தும் என்றும் கூறியுள்ளது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை எம்.சி.எல்.ஆர் முறையில் குறைக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரெப்போ விகிதம் குறைப்பின் பலனை முழுமையாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில்லை என கருதிய ரிசர்வ் வங்கி, மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் எனப்படும் எம்.சி.எல்.ஆர் முறையை கடந்த 2016 ஏப்ரல் முதல் அமலுக்கு கொண்டு வந்தது.
பிற வங்கிகள் ஆர்வம் காட்டுவதில்லை
எனினும், பேஸ்ரேட் முறையில் இருந்து வாடிக்கையாளர்களை புதிய முறைக்கு மாற்றுவதில் வங்கிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் இந்த பேஸ்ரேட் முறையில் வட்டி விகிதம் அதிகமாக இருப்பது, இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால், பேஸ்ரேட் முறையில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அதிக வட்டி விகிதத்தில் தவணை செலுத்தி வருகின்றனர். இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், இரண்டு முறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டால் வட்டி விகிதம் குறையும் என்பதால் வங்கிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கருதப்படுகிறது.
மக்கள் வரவேற்பு!
இந்த நிலையில் எஸ்.பி.ஐயின் இந்த வட்டி விகித குறைப்பு மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் எஸ்.பி.ஐயின் இந்த வட்டி விகித முறையால், ரிசர்வ் வங்கியின், வட்டி விகித மாற்றத்தின் பலனை மக்கள் உடனே பெற முடியும் என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications