ரியல் எஸ்டேட் துறை போல் என்றும் வளர்ச்சிக்குப் பஞ்சமில்லா ஒரு துறை பார்மா. நோய் இருக்கும் வரையில் இவர்களுக்கு லாபம் இருக்கும். இந்தியாவில் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும், சில நிறுவனங்கள் மட்டும் தான் மக்கள் தெரியும். இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு நிறுவனத்தின் பெயரை மக்கள் மனதில் பதிவைத்து நம்பிக்கையை உருவாக்குவது என்பது சாதாரணக் காரியம் இல்லை.
இதைதான் முரளி டிவிஸ் செய்துள்ளார்.
டிவிஸ் லேப்ஸ்
இந்திய பார்மா துறையில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கி, வர்த்தகத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனம் டிவிஸ் லேப்ஸ், இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் உரிமையாளருமான சி. முரளி டிவிஸ் 2018-19ஆம் நிதியாண்டுக்கு இத்துறையில் இதுவரையில் யாரும் பெற்றிடாத வகையில் சுமார் 58.8 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
46% சம்பள உயர்வு
இந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், அதில் டிவிஸ் லேப்ஸ் நிறுவனத் தலைவரான முரளி டிவிஸ் கடந்த வருடத்தைக் காட்டிலும் சுமார் 46.3 சதவீத சம்பள உயர்வு பெற்று சுமார் 58.8 கோடி ரூபாய் என்ற மாபெரும் தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
58.8 கோடி ரூபாய் சம்பளம்
கடந்த நிதியாண்டில் வெறும் 40.20 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று இருந்த நிலையில் இந்த வருடம் 58.8 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார். இதில் 57.61 கோடி ரூபாய் கமிஷனாகப் பெற்றுள்ளதாக வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என்.வி ரமணன் அவருக்கு 30 கோடி ரூபாயும், முரளி டிவிஸ்-இன் மகனும், நிறுவனத்தின் தலைவருமான கிரன் எஸ் டிவி-க்கு 20 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளனர்.
சராசரி சம்பள உயர்வு
இந்நிலையில் இந்நிறுவன ஊழியர்களின் சம்பள உயர்வைக் கணக்கிடும்போது சராசரி அளவு வெறும் 3.96 சதவீதமாக மட்டுமே இருக்கும் நிலையில், முரளி டிவிஸ் அவர்களின் சம்பள உயர்வு மட்டும் 46 சதவீதம் உயர்ந்திருப்பது இத்துறை ஊழியர்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
2018-19ஆம் நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 5,036 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் லாபம் வரிக்குப் பின் 1333 கோடி ரூபாயாக உள்ளது.
போட்டி நிறுவனங்கள்
பார்மா துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் சன் பார்மா-வின் தலைவர் திலிப் சங்வி-யின் ஒரு வருட சம்பளம் வெறும் 1 ரூபாய். இதேபோல் அரபிந்தோ பார்மா நிறுவன தலைவர் கோவிந்தராஜன் வருடத்திற்கு 14.6 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெறுகிறார்.
இதேபோல் சிப்லா, டாக்டர் ரெட்டி நிறுவனங்களின் தலைவர்களின் சம்பளம் கூட 20 கோடியை தாண்டவில்லை, ஆனால் முரளி டிவிஸ்-இன் சம்பளம் ஒரே வருடத்தில் 46 சதவீதம் அதிகரித்து 59 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications