பெய்ஜிங், சீனா: உலகின் உற்பத்தி கேந்திரம் போல செயல்பட்டு வந்த சீனாவின் தொழிற் துறை, கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தொழிற் துறை உற்பத்தி கடந்த ஜூலை 2019-ல் சரிந்திருக்கிறது. அதோடு முதலீடுகளும், சில்லறை வணிகமும் வேகம் குறைந்திருப்பதாக சீனாவின் அதிகாரபூர்வத் தரவுகள் சொல்கின்றன.
சீனாவில் இருந்து வெளியான இந்த தொழிற்துறை சார் தரவுகள் தான், தற்போது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதார நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது, அமெரிக்க சீன வர்த்தகப் போரால் எப்படிப்பட்ட பலத்த அடிகளை வாங்கி இருக்கிறது என்பதற்கான சாட்சி என்கிறார்கள் அனலிஸ்டுகள்.

சீனாவின் தொழிற் துறை உற்பத்தி கடந்த ஜூன் 2019-ல் காட்டிய 6.3 சதவிகித வளர்ச்சியை காட்டியதாம். தற்போது அதை விட 1.5 சதவிகிதம் குறைந்து, ஜூலை 2019-ல் 4.8 சதவிகித தொழிற் துறை உற்பத்தியைத் தான் காட்டி இருக்கிறதாம். சமீபத்தில் சீனாவின் தொழிற் துறை உற்பத்தி 6 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லி இருந்த ப்ளூம்பெர்க் கணிப்பை விட 1.2 சதவிகிதம் குறைவான தொழிற்துறை உற்பத்தி அதிகரிப்பு நடந்திருக்கிறதாம்.
சிக்கலான மற்றும் மோசமான வெளி பொருளாதார சூழல்கள், உள் நாட்டில் இறக்கம் கண்டு வரும் பொருளாதார காரணிகள், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளம் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சி போன்றவைகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் சீனாவின் தேசிய புள்ளியியல் துறையின் செய்தித் தொடர்பாளர் லியு அய்ஹா (Liu Aihua).
மிக குறிப்பாக, இந்த தொழிற் துறை உற்பத்தியோடு வெளியான, தரவுகளில், சீனாவில் இருக்கும் கோடிக் கணக்கான நுகர்வோர்கள், தங்கள் கையில் இருக்கும் பணத்தை செலவழிப்பதைக் குறைத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறது. அதை ஆமோதிக்கும் விதத்தில் இத்தனை நாள் நன்றாக இருந்த சில்லறை விற்பனை இப்போது சரிந்திருக்கிறதாம். சீனாவில் சில்லறை விற்பனை கடந்த ஜூன் 2019-ல் 9.8 சதவிகிதம் அதிகரித்திருந்ததாம். ஆனால் தற்போது ஜூலை 2019-ல் இந்த சில்லறை விற்பனை 7.6 சதவிகிதமாக குறைந்திருக்கிறதாம்.
சீனத் தலைவர்கள், தங்கள் பொருளாதாரத்தை ஏற்றுமதி மற்றும் அரசு முதலீடு சார் பொருளாதாரத்தில் இருந்து, உள்நாட்டு நுகர்வு சார் பொருளாதாரமாக மாற்றப் போராடும் போராட்டத்தை இந்த தரவுகள் காட்டுவதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். மிகக் குறிப்பாக சீனாவின் ஜிடிபி வளர்ச்சி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜூன் 2019 காலாண்டில் 6.2 சதவிகிதமாக இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் அனலிஸ்டுகள்.


Click it and Unblock the Notifications