டெல்லி: இந்தியாவில் புதிதாக களம் இறங்கப் போகும் அதிவேக ஐந்தாம் தலைமுறை இணைய சேவைக்கான ஸ்மார்ட்ஃபோன்களின் விலை, சுமாராக 300 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமாராக 21,000 ரூபாய்) மேல் இருக்கக் கூடாது. அப்போது தான் இந்தியாவில் அதிக நபர்கள் ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்களை வாங்குவார்கள் எனச் சொல்லி இருக்கிறது Airtel நிறுவனம்.
தற்போது உலகம் முழுக்க பரவலாக அதிவேக ஐந்தாம் தலைமுறை இணையத்துக்கான ஸ்மார்ட்ஃபோன்கள் சுமாராக 1,000 டாலர் விலைக்கு (இந்திய மதிப்பில் சுமாராக 70,000 ரூபாய்) விற்கப்பட்டு வருகின்றன. இந்த விலையில் சுமார் இரண்டு பங்காவது குறைந்து 21,000 ரூபாய்க்கு கீழ் ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்கள் வந்தால் தான் அடுத்த பெரிய டேட்டா நுகர்வுச் சந்தையைக் காண முடியும் என Airtel நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி (CTO - Chief Technology Officer) ரந்தீப் செகான் சொல்லி இருக்கிறார்.

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறைக்கான ஸ்மார்ட்ஃபோன்கள், மக்கள் வாங்கக் கூடிய விலையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைக்கு இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்களின் விலை அதிகமாகவே இருக்கின்றன. ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்கள் விலை குறைந்து சந்தைக்கு வர கொஞ்சம் காலம் பிடிக்கும்.
இந்தியாவில் நான்காம் தலைமுறைக்கான ஸ்மார்ட்ஃபோன்கள் பெரிய அளவில் விற்பனை ஆவதற்கான காரணம் அதன் விலை தான். இந்தியாவில் ஒரு தரமான நான்காம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன் சுமார் 100 டாலருக்குள்ளேயே (இந்திய மதிப்பில் சுமார் 7,000 ரூபாய்) கிடைக்கிறது. அதனால் தான் பெரிய அளவில் இந்தியாவில் நான்காம் தலைமுறைக்கான ஸ்மார்ட்ஃபோன்கள் சக்கைப் போடு போடுகின்றன என்கிறார் ரந்தீப் செகான்.
உலகில் ஐந்தாம் தலைமுறைக்கான ஸ்மார்ட்ஃபோன்களுக்கான சப்ளைகள், வரும் 2021-ம் ஆண்டுக்குள் சுமார் 255 சதவிகிதம் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறது சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் (Counterpoint). இதை எண்ணிக்கையில் பார்த்தால் சுமார் 110 மில்லியன் (11 கோடி) ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்களாம்.
ஏற்கனவே மத்திய அரசு, 2019-ம் ஆண்டில் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றைக்கான ஏலத்தை நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறது. அதோடு ஏற்கனவே அனைத்து ஸ்பெக்ட்ரம் பேண்டிலும் ஐந்தாம் தலைமுறைக்கான அலைவரிசை சோதனைகளை நடத்த, இந்தியாவில் பதிவு செய்திருக்கும் எல்லா டெலிகாம் நிறுவனங்களும் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் விதத்தில் வழிமுறைகளையும் வகுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications