சென்னை, தமிழ் நாடு: Ashok Leyland நிறுவனம் கடந்த ஜூலை 2019 மாதத்தில் மட்டும் 10,927 வாகனங்களை மட்டுமே விற்று இருக்கிறதாம். ஆனால் ஜூலை 2018-ல் 15,199 வாகனங்களை விற்று இருக்கிறதாம். ஆக சுமார் 28 சதவிகித சரிவை சந்தித்து இருக்கிறது, Ashok Leyland.
இப்படி வியாபார சரிவில் ஓடும் நிறுவனத்தில் செலவைக் குறைக்க, தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது Ashok Leyland நிர்வாகம். தன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS - Voluntary Retirement Service) அல்லது தங்கள் ஊழியர்களை பிரித்து விடும் திட்டம் (ESS - Employee Separation Scheme) இரண்டையும் செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

ஆனால் மற்றொரு பக்கம், Ashok Leyland நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள், தங்களுக்கான போனஸ் தொகையை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் எனப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்று இரண்டாவது நாளாக போனஸ் தொகையை உயர்த்தக் கோரி ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். நிர்வாகம் நாளை மறு நாள் வரை (ஆகஸ்ட் 19, 2019 திங்கட் கிழமை) வேலை இல்லாத நாட்களாக அறிவித்து இருக்கிறது. நிர்வாகம் ஒரு நல்ல முடிவுக்கு வரும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம் எனச் சொல்லி இருக்கிறார்கள் Ashok Leyland தொழிலாளர்கள் சக்கத்தினர்.
Ashok Leyland தொழிலாளர்கள் சங்கம், கடந்த ஆண்டு வழங்கிய போனஸ் தொகையை விட, இந்த ஆண்டு 10 சதவிகிதம் கூடுதலாக போனஸ் தொகையைக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் Ashok Leyland நிர்வாகமோ 10 சதவிகிதம் எல்லாம் உயர்த்திக் கொடுக்க முடியாது, அதற்கான சூழ்நிலை இல்லை. ஐந்து சதவிகிதம் தான் போனஸை உயர்த்திக் கொடுக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இந்த ஐந்து சதவிகித உயர்வை Ashok Leyland தொழிலாளர்கள் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. விளைவு போராட்டம் வெடித்து இருக்கிறது.
தற்போதைக்கு இரண்டு ஷிப்ட்களில் பணியாற்றும் 1,800 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்து இருக்கிறார்கள். வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20, 2019) அன்று Ashok Leyland நிறுவனத்துக்கு தென் இந்தியாவில் இருக்கும் உற்பத்தி ஆலைகளிலும் வேலை நிறுத்தத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications