இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு வரப்பட்டு சுமாராக 30 ஆண்டுகள் ஆகி விட்டது.
இப்போது தனியார் நிறுவனங்கள் ஒன்றும் கைக் குழந்தை இல்லை. அவர்கள் 30 வயது நிரம்பிய மனிதர்கள்.
இனியும் தனியார் நிறுவனங்களுக்கு ஏதாவது சிக்கல்கள், பிரச்னைகள் ஏற்பட்டால் அவைகளை, தனியார் கம்பெனிகளே சுயமாக நின்று சமாளிக்கத் தொடங்க வேண்டும். அரசிடம் வந்து நிதி சார்ந்த ஊக்குவிப்புகளைக் கேட்கக் கூடாது என காட்டமாகச் சொல்லி இருக்கிறார் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.
நோ உதவி
அதோடு இனியும் தனியார் நிறுவனங்கள் லாபம் வந்தால் அள்ளிக் கொள்வது, நட்டங்களை சோசியலைஸ் செய்வது, பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படும் காலங்களில் அரசிடம் உதவி கேட்பது போன்றவைகளைச் செய்யக் கூடாது எனவும் கண்டிப்பான குரலில் சொல்லி இருக்கிறார். இந்தியா சந்தைப் பொருளாதாரத்தில் இருக்கிறது. சந்தைப் பொருளாதாரத்தில் ஒருவர் சொத்தை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால், அதை வேறு சில முதலீடுகளில் பிரித்து முதலீடு செய்வார்கள்.
சுயமாக நில்லுங்கள்
அப்படித் தான் தனியார் நிறுவனங்களும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன். இவர் தாக்கல் செய்த முதல் பொருளாதார சர்வே அறிக்கையிலும், தனியார் நிறுவனங்களை அரசு ஊக்குவித்துக் கொண்டே இருக்கக் கூடாது. அப்படி தனியார் நிறுவனங்களை அரசு ஊக்குவித்து அவைகளை ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனங்களாகவே வைத்திருக்கக் கூடாது எனவும் அரசுக்கு பரிந்துரைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள் முக்கியம்
இந்தியப் பொருளாதாரம் முன்னேற இனியும் நுகர்வை நம்பி இருக்கக் கூடாது. இந்தியாவின் நுகர்வு ஒரு பொருளாதார வளர்ச்சிக் காரணி கிடையாது. கடந்த 10 ஆண்டுகளில் நுகர்வு தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தியதில் பெரிய பங்கு இருந்தது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக முதலீடுகள் பெரிய அளவில் வரவில்லை. இனி முதலீடுகளில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தனியார் முதலீடுகள் தான் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனச் சொல்லி இருக்கிறார் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.
விளக்கம்
தனியார் முதலீடுகள் வந்தால், உற்பத்தி அதிகரிக்கும், உற்பத்தி அதிகரித்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், வேலைவாய்ப்பு அதிகரித்தால் தனி நபர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், சம்பளம் அதிகரித்தால் நுகர்வு அதிகரிக்கும், நுகர்வு அதிகரித்தால் தேவை அதிகரிக்கும், கூடுதல் தேவை இருந்தால், கூடுதல் முதலீடுகள் வரும் எனவும் விளக்கி இருக்கிறார். அதோடு ஒட்டு மொத்தமாக இந்திய நாட்டின் ஏற்றுமதிகளும் கணிசமாக அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications