டெல்லி: நிதிப் பிரச்னையால் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் தன் அன்றாட வியாபார செயல்பாடுகளைக் கூடச் செய்ய முடியாமல் தற்போது தவித்துக் கொண்டு இருக்கிறதாம். எனவே உடனடியாக 2,500 கோடி ரூபாயை அவசர நிதியாக மத்திய அரசு கொடுக்க வேண்டும் என ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மத்திய அரசுக்கு வேண்டு கோள் வைத்திருக்கிறதாம்.
இதுவரை ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 60,000 கோடி ரூபாய் கடன் பாக்கி இருக்கிறது. இதுவரை அரசிடம் ஈக்விட்டி சார் நிதி உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.

கடந்த அக்டோபர் 2018-ல் ஏர் இந்தியா நிறுவனத்தின் சாவரின் கேரண்டி (Sovereign Guarantee) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இந்த திட்டம் மூலம் சுமார் 7,600 கோடி ரூபாய் கடன் வாங்க ஏர் இந்தியாவுக்கு அனுமதி கொடுத்தது மத்திய அரசு. அதில் சுமாராக 5,000 கோடி ரூபாயைத் தான் கடன் வாங்கிக் கொண்டது ஏர் இந்தியா. தற்போது பாக்கி இருக்கும் தொகையையும் கடனாக கொடுக்க மத்திய அரசிடம் கேட்டிருக்கிறதாம்.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஈக்விட்டி வழியாக நிதி வராத போது, கடன்களை கையாள முடியாது. இந்த நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதி சார்ந்த செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. அதோடு ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு லாபமும் சிறப்பாக இருக்கிறது என ஏர் இந்தியா நிறுவனமே சொல்லி இருக்கிறது.
சமீபத்தில் அரசு ஏர் இந்தியாவின் 29,000 கோடி ரூபாய் கடனைக் குறைத்துக் கொடுத்தது. இருப்பினும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் நிதி சிக்கல்கள் தீர்ந்த பாடில்லை. சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தன் விமானிகளுக்கு கொடுக்க வேண்டிய படிச் செலவுகளைக் கூட கொடுக்கவில்லையாம். நாளுக்கு நாள் இப்படி நிச்சயமற்ற தன்மை நிறுவனத்தில் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக ஒரு ஏர் இந்தியா விமானி சொல்லி இருக்கிறார்.
அதோடு பண்டிகை காலம் வேறு வருகிறது. ஏர் இந்தியா நிர்வாகத்திடமும், அரசிடமும் நிறுவனத்தை ஒழுங்காக நடத்தச் சொல்லி ஏர் இந்தியா விமானிகள் முறையிடப் போவதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த விமானிகளில் ஒருவர் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க முயற்சித்து முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications