வருமான வரிப் படிவங்களை முறையாக பூர்த்தி செய்து, சமர்பிக்க சில பிரிவினர்களுக்கு குறிப்பாக தனி நபர்களுக்கு இன்று தான் கடைசி தேதி.
இன்று உங்களுடைய வருமான வரியைத் தாக்கல் செய்ய மறந்துவிட்டீர்கள் என்றால் நாளை கூட வருமான வரி தாக்கல் செய்யலாம். ஒன்றும் பிரச்னை இல்லை.
ஆனால் ஒரு 5,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். பரவாயில்லையா. இந்த பெரிய தொகையை அபராதம் செலுத்த விரும்பாதவர்கள் தங்கள் வருமான வரிப் படிவத்தை இன்றே தாக்கல் செய்து விடுங்கள்.
இவர்கள் எல்லாம் கட்டாயம்
1. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள், டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவர்கள்
2. வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள்
3. க்ரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள்
4. க்ளப்களில் ஆண்டுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இருப்பவர்கள்.
5. சுமாராக 1,000 சதுர அடிக்கு மேல் சொந்த வீட்டிலோ, வாடகை வீட்டிலோ குடி இருப்பவர்கள்
6. 150 சதுர அடி வணிக இடத்தை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ பயன்படுத்துபவர்கள்
7. கார் வைத்திருப்பவர்கள்... இவர்கள் எல்லாம் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
ஆவணங்கள் மற்றும் படிவங்கள்
அது போக பான் அட்டை, ஆதார் அட்டை, ஃபார்ம் 16, ஃபார்ம் 26 AS, சொத்து விவரங்கள், வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட்கள் அவசியம் தேவையாக இருக்கும். இது எதுவுமே சரிப்பட வில்லையா, நேரடியாக ஒரு ஆடிட்டரைச் சென்று பாருங்கள்.
சரி பாருங்கள்
வருமான வரிப் படிவத்தை நிரப்பும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் கொடுக்கும் விவரங்களில் எழுத்துப் பிழை இல்லாமல், தவறில்லாமல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு சின்ன எழுத்துப் பிழை கூட உங்களுக்கு வருமான வரித் துறையினரிடம் இருந்து நோட்டீஸ் வர வைக்கும் தவறாக அமையலாம். எனவே கவனம் தேவை..! முழுமையான வருமான வரிப் படிவத்தை நிரப்பிய பின் ஒரு முறை நிதானமாக படித்துப் பார்த்துவிட்டு சமர்பிக்கவும்.
ஜாக்கிரதை
சம்பளம் வழியாக வந்த பணத்தை சம்பளத்துக்கான இடத்திலும், பங்குகளை விற்றுக் கிடைத்த மூலதன ஆதாயங்களை, அதற்கான இடத்திலும் நிரப்ப வேண்டும். இப்படி வருமான வரித் துறையின் படிவத்தில் கேட்டிருக்கும் விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு சரியான விவரங்களைக் கொடுக்க வேண்டும். தவறான இடத்தில் வருமானங்களைக் குறிப்பிட்டாலும் சிக்கலில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே உஷார் மக்களே.
இப்போது வேண்டாம்
நீங்கள் வருமான வரியை மிச்சம் பிடிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் மார்ச் மாதத்திலேயே யோசித்து இருக்க வேண்டும். இப்போது வருமான வரிப் படிவத்தை நிரப்பப் போகும் போது, 80D, 80C என வரியை செலுத்தாமல் இருக்க வழி தேட வேண்டாம். ஒருவேளை ஆர்வத்தில் நீங்கள் அரசை ஏமாற்ற நினைத்து பொய்யான ஆவணங்களைச் சமர்பிப்பித்து சிக்கிக் கொண்டால் நாளை நோட்டீஸுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆள் ஆவீர்கள். எனவே என்ன வருமானம் வருகிறதோ அதற்கு ஒழுங்காக வரி செலுத்திவிடுங்கள்.


Click it and Unblock the Notifications